மகளிர் ஸ்டேஷனுக்கு கூடுதல் போலீஸ்

பழநி, மே 23: மகளிர் காவல் நிலையங்களுக்கு கூடுதல் பெண் போலீசார் நியமிக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு: தமிழக காவல்துறை இந்திய காவல்துறைகளில் சிறந்ததாக திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழக காவல்துறை 2ம் இடம் வகிக்கிறது. ஆனால் மகளிர் காவல்நிலையங்களில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மகளிர் போலீசார் இல்லாத நிலை நிலவுகிறது. தமிழகத்தில் 196 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. இவற்றில் 13 ஆயிரம் பேர் மட்டுமே மகளிர் காவலர்களாக பணிபுரிகின்றனர். தமிழகத்தில் 6 சட்டம்&ஒழுங்கு அலுவலகத்திற்கு 1 மகளிர் காவல் நிலையம் என்ற முறை பின்பற்றப்படுகின்றது.

மகளிர் காவல்நிலையங்களில் மகளிர் காவலர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பணிச்சுமை, விடுமுறை கிடைக்காமை, மனஉளைச்சல் மற்றும் உடல்ரீதியான சிரமங்களுக்கு உட்படுவதால் பலர் விருப்ப ஓய்வு மற்றும் வேலையை ராஜினாமா செய்யும் நிலைமையில் உள்ளனர். எனவே, பணி சுமையை குறைக்க கூடுதல் பெண் போலீசார் நியமிக்கப்பட வேண்டும். தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் காவலர்களில் மகளிர் காவல்நிலையத்திற்கு அதிகளவில் பணி நியமிக்க வேண்டும். அதுபோல் 1 தாலுகாவிற்கு 2 மகளிர் காவல்நிலையம் அமைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: