×

குமரி மருத்துவக்கல்லூரியில் சிறுமிக்கு பாலியல் ெதால்லை கைதான காவலாளி மீது ஏராளமான வழக்குகள் நன்னடத்தை சான்றிதழ் அளிக்காமல் பணியில் சேர்ந்தது எப்படி?

நாகர்கோவில், மே 23 : ஆரல்வாய்மொழி அருகே உள்ள செங்கல்சூளையில் பணியாற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் இரண்டரை வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இளம்பெண்ணும், அவரின் 10 வயது நிரம்பிய மூத்த மகளும் மருத்துவமனையில் இருந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன் தனது தாயாருடன், 10 வயது சிறுமி படுத்திருந்தார். அப்போது அந்த வார்டுக்கு காவலாளியாக இருந்த , நாகர்கோவில் நேசமணிநகர் பெஞ்சமின் தெருவை சேர்ந்த சுபின் (24)  என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். திடீரென கண் விழித்த சிறுமியின் தாயார், மகளிடம் சுபின் செய்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக சுபின் சிறுமியையும், அவரது தாயாரையும் மிரட்டி விட்டு தப்பினார். இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சென்று விசாரணை நடத்தினர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதாவும் சென்று  நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், சுபின் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். சுபின் மீது ஏற்கனவே குமரி  மாவட்ட காவல் நிலையங்களிலும், கோவை மாவட்ட காவல் நிலையங்களில் திருட்டு  உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தமிழகம் முழுவதுமே மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்பு பணி தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த தனியார் நிறுவனம் தான் ஊழியர்களை தேர்வு செய்து வழங்குகிறது. அந்த அடிப்படையில் குமரி மருத்துவக்கல்லூரியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் 46 பேர் செக்யூரிட்டிகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 3 பேர் மட்டுமே பெண்கள். 3 ஷிப்ட் அடிப்படையில் இவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. இவர்களை கண்காணிக்க சூப்பர் வைசர், மேலாளர் உள்ளிட்டோரும் நிறுவனத்தின் சார்பில் உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களிடம் இருந்து போலீஸ் நன்னடத்தை சான்றிதழ் பெற வேண்டும் என்பது விதிமுறை ஆகும். ஆனால் இந்த நிறுவனத்ைத சேர்ந்தவர்கள் சிபாரிசின் அடிப்படையில் குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் தான் சுபினும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுபினின் தந்தை ஆம்புலன்சு டிரைவர் ஆவார். அவர் சிபாரிசு செய்ததன் பேரில் சுபினுக்கு பணி வழங்கி உள்ளனர். போலீஸ் நன்னடத்தை சான்றிதழ் கேட்டு இருந்தால், சுபின் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பது தெரிய வந்து இருக்கும். எனவே இனியாவது வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது சம்பந்தப்பட்ட நிறுவனம் போலீஸ் நன்னடத்தை சான்றிதழ் பெற்ற பின்னரே பணிக்கு சேர்க்க வேண்டும் என மருத்துவக்கல்லூரி நிர்வாகம் கூறி உள்ளது.

Tags : guardian ,Kumari ,
× RELATED கார்டியன் விமர்சனம்…