×

மது போதையில் மோதல் நூலக கட்டிட வளாகத்தில் வாலிபர் அடித்து கொலை

நாகர்கோவில், மே 23 :  நாகர்கோவிலில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். நாகர்கோவில் வடசேரி பாலமோர் ரோட்டில் கலைவாணர் கலை அரங்கம் எதிரில், இந்து சமய அறநிலையத்துக்குட்பட்ட  சித்ரா இந்து மத நூல் நிலையமும், கலையரங்கமும் உள்ளது. இந்த நூலகம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இயங்கும். திங்கட்கிழமை விடுமுறை ஆகும். இந்த நூலகத்தையொட்டி உள்ள கலையரங்கில் தனியார் சார்பில் ஜவுளி விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் நாள் தோறும் அறநிலையத்துக்கு ரூ.2500 வாடகை கொடுத்து வந்தனர். மாதம் ரூ.75 ஆயிரம் வாடகை, அறநிலையத்துறைக்கு கிடைத்து வந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன் மாநகராட்சிக்கும், அறநிலையத்துறைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் ஜவுளி விற்பனை நிலையம் காலி செய்யப்பட்டது. இதனால் மண்டபம் காலியானது. இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் சுவர் ஏறி குதித்து மண்டபத்தில் அமர்ந்து மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற செயல்களில் இறங்கி வந்தனர். காலையில் பணியாளர்கள் வந்து எச்சரித்து இவர்களை அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நூலகத்தை திறக்க பணியாளர் வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் போதையில் தள்ளாடியபடி மண்டபத்தில் இருந்து நடந்து வந்தார். இதை பார்த்த ஊழியர் உடனடியாக அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது  மண்டபத்தின் இடது பக்க வராண்டாவில் மற்றொரு வாலிபர் முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.ஏ.எஸ்.பி. ஜவகர், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போதையில் பேச முடியாமல் ரத்த காயத்துடன் இருந்த வாலிபரை 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபரை போலீசார் சென்று பார்த்த போது அவர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கிய கோட்டார் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (28) என்பது தெரிய வந்தது. இவர் அடிக்கடி குடிபோதையில் ஆங்காங்கே ரோட்டில் கிடப்பதும், சமீபத்தில் கூட பிக்பாக்கெட் அடித்து போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது.  இரவு நேரத்தில் சிவக்குமாரும், வாலிபரும் சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இருவரும் மாறி, மாறி கட்டை, கம்பு, பாட்டிலால் தாக்கி கொண்டதில் சிவக்குமார் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சிவக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கருங்கல் தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ் மகன் ஜாண் (48) என்பது தெரிய வந்தது. மது போதையில் அவதூறாக பேசி தன்னை தாக்கியதால், தானும் சிவக்குமாரை தாக்கியதாக அவர் கூறி உள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் நாகராஜா கோயில் மேலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட அறிநிலையத்துறை பணியாளர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர்.மது பாட்டில் குவியல்கள்சித்ரா நூலகத்தையொட்டி அமைந்துள்ள கலையரங்கம் பழமையான கலைநயத்துடன் கட்டப்பட்டு உள்ளது. உரிய பராமரிப்பு இல்லாமல் அந்த வளாகமே புதர் மண்டி கிடக்கிறது. மண்டபத்தின் வராண்டாவில் மது பாட்டில்கள் ஆங்காங்கே உடைந்து கிடந்தன. குப்பைகளும், பூச்சிகளும் ஆக்ரமித்துள்ளன. ஜவுளி விற்பனை நிலையம் இருக்கும்போது இரவு நேரத்திலும் ஆட்கள் இருப்பார்கள். எந்த வித பிரச்னையும் இல்லாமல் இருந்தது. இப்போது இரவு நேரத்தில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வருபவர்களால் பிரச்னை ஏற்பட்டு, கொலையில் முடிந்துள்ளது என்று பணியாளர்கள் கூறினர்.

Tags : murder ,library building premises ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...