×

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு குமரியில் 1000 போலீஸ் கண்காணிப்பு

* நாகர்கோவிலில் இன்று போக்குவரத்து மாற்றம்
* வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

நாகர்கோவில், மே 23 :  வாக்கு எண்ணிக்கையையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. நாத் எச்சரித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மையமான கோணம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவம் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியை சுற்றியும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கையையொட்டி இன்று காலை முதல் கோணம் ரோட்டில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் மார்க்கமாக செல்ல வேண்டிய அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் புன்னைநகரில் இருந்து மூவேந்தர் நகர் சென்று அங்கிருந்து வலது புறம் சானல்கரை ரோடு வழியாக ராஜாக்கமங்கலம்  ரோட்டுக்கு செல்ல வேண்டும். இதே போல் ராஜாக்கமங்கலம்18ம் பக்கம் பார்க்கமார்க்கமாக நாகர்கோவில் வர வேண்டிய அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் கம்பி பாலத்தில் இருந்து குருகுலம் சாலை வழியாக ஆசாரிபள்ளம் ரோடு, ராணித்தோட்டம் டெப்போ, டெரிக் சந்திப்பு வழியாக நாகர்கோவில் வர வேண்டும்.

 இன்று ஒரு நாள் முழுவதும் இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். இது தவிர முடிவுகள் வெளியாகும் நிலையில் பிரச்னைகள் எதுவும் ஏற்படாத வகையில் மாவட்டம் முழுவதும் 1000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கன்னியாகுமரி, குளச்சல், நாகர்கோவில், தக்கலை ஆகிய 4 சப்  டிவிஷன்களிலும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். அதி விரைவுப்படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு  உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறும் வகையில் அனைத்து அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எஸ்.பி. நாத் கேட்டுக் கொண்டு உள்ளார். மேலும் அவர் கூறுகையில், வெற்றி பெறக்கூடிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களது வெற்றியை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும். வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுடன் எஸ்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.

Tags : Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...