புகாரை வாபஸ் பெறக்கோரி அறம் மக்கள் நலச்சங்க தலைவரை மீண்டும் கடத்த முயற்சிதிருச்சியில் பரபரப்பு

திருச்சி, மே 23:  திருச்சி கே.கே. நகர் அருகே உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜா(எ)அழகர்சாமி(45), விசி கட்சியின் வணிகர் அணி மாநில துணைச் செயலாளர். இவரது தம்பி ரமேஷ்குமார் கட்சியின் அச்சு ஊடக மைய மாநில துணைச்செயலாளராக உள்ளார். இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்.11ம் தேதி இரவு மன்னார்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து அழகர்சாமி வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் 2 கார்களில் வந்து அழகர்சாமி சென்ற காரை வழிமறித்து அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி அழகர்சாமியை அவர்களது காரில் கடத்திச் சென்றனர். அவர் வைத்திருந்த ரூ.4 லட்சம், அணிந்திருந்த 18 பவுன் நகைகளையும் பறித்துக்கொண்டனர். தொடர்ந்து அவரை கடத்தி சென்ற மர்ம கும்பல் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வைத்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டியது. அவர் பணம் தர முடியாது என கூறியதையடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். தொடர்ந்து பேரம் பேசியதில் ரூ.40 லட்சம் கொடுக்க வேண்டும் என கும்பல் மிரட்டியது. அந்த பணத்தை கொடுக்க அழகர்சாமி ஒத்துக்கொண்டார். இதையடுத்து அந்த கும்பல் அவரை அங்கேயே இறக்கி விட்டு விட்டு அவரது காரிலேயே தப்பி சென்றனர்.

 இது குறித்து தகவலறிந்த அழகர்சாமியின் தம்பி ரமேஷ்குமார் வேறு காரில் சென்று அழகர்சாமியை கே.கே. நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அசோக் மற்றும் பட்டாசு ராஜா, மதுரையை சேர்ந்த ரவுடி சாமிரவி ஆகிய இருவருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே அழகர்சாமியுடன் இணைந்து தொழில் புரிந்து வந்த இருவரும் தற்போது விலகிச் சென்றுவிட்டனர். கடந்த வாரம் இது தொடர்பாக அழகர்சாமியை இருவரும் மிரட்டியதாக புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வருகிறார்கள். இதற்கிடையில், புகாரை வாபஸ் பெறக்கோரி போனிலும், நேரிலும் மிரட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: