ஆற்றின் கரையில் முதியவர் சடலம் போலீஸ் விசாரணை

கும்பகோணம், மே 23: கும்பகோணம் அருகே ஆற்றின் கரையில் முதியவர் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆற்றில் இறங்கும்போது கால்தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருநீலக்குடி மாங்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (56). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு சென்ற ஜெயராமன் அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்கு பின்புறம் ஓடும் தீர்த்தமன்னாறு கரையில் மர்மமான முறையில் ஜெயராமன் இறந்து கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் ஆற்றில் இறங்கும்போது கால் தவறி விழுந்து இறந்தாரா அல்லது ஆற்றில் மூழ்கி இறந்தாரா என்பது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை: பாபநாசம் அருகே பசுபதிகோயில் பட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பிரவீனா (26). இவர் சம்பவத்தன்று விஷம் குடித்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் பிரவீனாவை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீனா இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

தஞ்சை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் முதியவர் சடலம்: தஞ்சை ரயில் நிலைய 1வது பிளாட்பாரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று காலை இறந்து கிடந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து இறந்து கிடந்த முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: