×

கோடை வெயிலில் இருந்து தென்னங்கன்றுகளை பாதுகாக்கும் வழிமுறை வேளாண் அதிகாரி விளக்கம்

பட்டுக்கோட்டை, மே 23: கோடை வெயிலில் இருந்து தென்னங்கன்றுகளை பாதுகாக்கும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தென்னை மரங்கள் அனைத்தும் கஜா புயலால் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில் விவசாயிகள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளனர். இதை சரி செய்யும் விதமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கஜா தென்னை வாழ்வாதார தொகுப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெட்டை தென்னங்கன்றுகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்டு வரும் தென்னங்கன்றுகளை விவசாயிகள் தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது சவாலாக உள்ளது.இதுகுறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் (பொ) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது வேளாண்மையில் முழுமையான அணுகுமுறையில் நீடித்த வேளாண்மை, அங்கக வேளாண்மை, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர் மற்றும் பூச்சி மேலாளண்மையில் சணப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் அல்லாமல் சணப்பை மண் அமைப்பை மேம்படுத்துதல், நீர்பிடிப்பு திறனை அதிகப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், தேவையில்லாத களைகளை கட்டுப்படுத்துதல், வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை உட்கிரகித்தல், காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தி கன்றை காத்தல், மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் காரணிகளை மேம்படுத்துதல் போன்ற அறியவகை பயன்களையும் தருவதால் தற்போது புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்யும் விவசாயிகள் அனைவரும் பசுந்தாள் உரப்பயிரான சணப்பை விதையை ஒரு கன்றுக்கு 50 கிராம் வீதம் தென்னங்கன்றை சுற்றி விதைப்பு செய்து அதை பூ பூக்கும் தருணத்தில் அந்த செடியை பிடுங்கி அப்படியே மண்ணில் புதைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
இவ்வாறு செய்வதால் அப்படியே உரமாக மாறி தழைச்சத்தாக தென்னங்கன்றுகளுக்கு கிடைக்கிறது. இவ்வாறு செய்வதால் விதைப்பு செய்த 2 மாதத்துக்கு தென்னங்கன்றை குளிரூட்டப்பட்ட சூழ்நிலையை உருவாக்கி ஆரோக்கியமாக பராமரித்து விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Agricultural Officer ,
× RELATED முத்துப்பேட்டை பகுதியில் ஆய்வு நெல்...