திமுகவை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த வழக்கில் உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆத்தூர், மே 23: ஆத்தூரில் திமுகவை சேர்ந்த நிதி நிறுவன அதிபர், வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பல நாட்களாகியும் விசாரணையை தொடங்காமல் இழுத்தடித்து வரும் போலீசார், உயரதிகாரிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.  சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் விநாயகபுரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரேம்குமார்(49). நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், கடந்த 14ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டு, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில், தன்னிடம் கடன் வாங்கிய ஆட்டோ ஓட்டுனர் குட்டி (எ) ராஜ்குமார் என்பவர், வாங்கிய கடனை திரும்பி தராமல் ஏமாற்றினார். தன் மீதும், தம்பி செந்தில்குமார் மீதும் பொய்யாக நாடகமாடி சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார். இதன்பேரில் ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் டிஎஸ்பி ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டு மிரட்டினர். கடன் வாங்கியவர்களும் வரிசையாக  ஏமாற்றி விட்டனர். எனவே தற்கொலை முடிவை எடுக்கிறேன். எனது தற்கொலைக்கு ஆத்தூர் காவல்துறையே முழு காரணம்’’ என்று தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, சேலம் மாவட்ட எஸ்பி தீபாகனிகர், ஆத்தூருக்கு வந்து நேரடி விசாரணை நடத்தினார். பின்னர், அவரது அறிவுரையின் பேரில், பிரேம்குமாரின் மகன் அரவிந்தன், புகார் மனு கொடுத்தார். இதனை பெற்றுக் கொண்ட எஸ்பி தீபாகனிகர், மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்து, விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்நிலையில், அரவிந்தன் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சட்ட பிரிவுகளை கொண்டு வழக்கு பதிவு செய்யாமல், வெறுமனே தற்கொலை வழக்கு பிரிவு மட்டுமே பதிவு செய்யப்பட்டது. அரவிந்தன் கொடுத்த புகாரில் உள்ள சில வாக்கியங்களை நீக்கி விட்டு, புகார் மனு வழங்கும்படி, போலீசார் தரப்பிலிருந்து ஆத்தூரில் மிகப்பெரிய தொழில் அதிபர்கள் மூலமாக பிரேம்குமாரின் மகன்கள் மற்றும் தம்பி செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் பேரங்கள் பேசப்பட்டது. ஆனால், அவர்கள் அதை ஏற்காததால், கடந்த 20ம் தேதி 174 சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை, அரவிந்தனிடம் போலீசார் வழங்கினர்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘அரவிந்தனின் புகார் மனுவின் முழு விபரமும் இருக்கும் நிலையில், அதில் எந்த சட்டப்பிரிவும் கூறப்படாமல் தற்கொலை சட்டப்பிரிவு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி இந்த வழக்கிற்காக நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சுரேஷ்குமார், இதுவரை இந்த வழக்கு குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை. சம்பவத்தன்று ஆத்தூருக்கு வந்த அவர் அதன் பிறகு வரவில்லை. போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால் தான், அவர்கள் விசாரணையை இழுத்தடித்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் ேவதனையாக உள்ளது,’ என்றனர்.

Related Stories: