சேலம் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 127 சிறுவர்கள் மீட்பு

சேலம், மே 23: சேலம் ரயில் நிலையத்தில் கடந்த நான்கு மாதத்தில் சுற்றித்திரிந்த 127 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சேலம் ரயில்வே ஸ்டேஷனில் உதயம் தன்னார்வ் தொண்டு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், போர்ட்டர், வென்டர், டாக்ஸி, ஆட்டோ டிரைவர்கள் என மொத்தம் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு  அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், வழி தவறி ரயில்வே ஸ்டேஷன் வரும் சிறுவர், சிறுமியர், பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர்கள் மீட்கப்படுவர். அதன்படி, கடந்த நான்கு மாதத்தில் சேலம் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவர்கள், வீட்டை விட்டு வெளியேறு ரயில் நிலையத்துக்கு வந்த சிறுவர்கள் என மொத்தம் 127 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சேலம் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் இனைந்து குழந்தை கடத்தலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.  

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ரயில்வே போலீசாரை பொறுத்தவரை குழந்தை கடத்தலை தடுக்கவேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த  நான்கு மாதத்தில் சேலம் ரயில் நிலையத்தில்  சுற்றித்திரிந்த 114 சிறுவர்கள், 13 சிறுமிகள் என மொத்தம் 127 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 8 முதல் 18 வயதுக்குட்பட்ட நிலையில் மீட்கப்படும் சிறுவர்களில் பெரும்பாலானோர் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறுபவர்களாக உள்ளனர். மீட்கப்படும் சிறுவர்கள் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள், சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்களுக்கு அறிவுரை கூறி சிறுவர்களை அனுப்பி வைத்து வருகின்றனர், என்றனர்.   

Related Stories: