×

நடத்துனர் இல்லா பேருந்துகளால் அரசுக்கு வருவாய் இழப்பு சிரமத்துடன் பயணிக்கும் பயணிகள்

புதுக்கோட்டை, மே 23: புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படும் 11 நடத்துனர் இல்லாத பேருந்துகளால் தினசரி லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் மிகுந்த தாமதத்துடன் பயணிக்க வேண்டியுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.  தமிழகம் முழுவதும் பல்வேறு புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களுக்குள் நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதற்கு பல கட்டங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் அதிகாரிகள் இந்த நடத்துனர் இல்லாத பேருந்துகளை இயக்குவதில் முனைப்பு காட்டினர். இதுபோல் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு நடத்துனர் இல்லாத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு 2  பேருந்தும், அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு 3 பேருந்துகளும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கும், 5 பேருந்துகள் திருச்சியில் இருந்து மதுரைக்கும் என மொத்தம் புதுக்கோட்டை டெப்போ கட்டுப்பாட்டில் உள்ள 11 பேருந்துகள் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை பகுதிகளுக்கு நடத்துனர் இல்லாத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்துகள் பஸ் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டு பயணிகள் வந்தவுடன் ஒரு நடத்துனர் டிக்கட் போடுகிறார். பிறகு பேருந்து புறப்பட்டு சிறிது தூறம் சென்ற பிறகு டிக்கெட் புக், பணத்தை ஒரு பெட்டியில் போட்டு ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு இறங்கிவிடுகின்றனர். நடத்துனர் இறங்கிய பிறகு 20 பயணிகள் வந்தாலும் அந்த பேருந்தில் இடம் இருந்தாலும் ஏறமுடியாது. வேறு பேருந்தில் தான் ஏற முடியும். இதனால் பயணிகள் மிகவும் சிறமப்படுகின்றனர். இதனால் போக்குவரத்து துறைக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை டெப்போவிற்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கு மேல் தினசரி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரு புறம் நஷ்டம் என்றால் மறுபுறம் பயணிகள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்து வருகின்றனர். நடத்துனர் இருந்தால் பயணிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அதனை கவனிப்பார். தற்போது ஓட்டுனர் மட்டும் இருப்பதால் அவர் பேருந்து இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பேருந்தில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதில்லை. கவனிக்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடத்துனர் இல்லாத பேருந்துகள் இயக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்ட போக்குவறத்து துறைக்கு இருந்து 11 பேருந்துகள் நடத்துனர் இல்லாத பேருந்துகளாக புதுக்கோட்டை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் நடத்துனர் இருந்தபோது ஒரு பேருந்து தினசரி ரூ.30 ஆயிரம் குறைவில்லாமல் வசூலானது.இதனால் 11 பேருந்துகள் தினசரி ரூ.3லட்சத்து 30 ஆயிரம் புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்து துறைக்கு வசூலானது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலகம், மியூசியம், கருவேபிலான் ரயில்வேகேட் ஆகிய பகுதியிகளில் இருந்து பயணிகள் ஏறுவார்கள்.இதபோல் திருச்சியில்  இருந்து புதுக்கோட்டைக்கு வரும்போது திருச்சி பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட், ஏர்போர்ட் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் ஏறுவார்கள். அதனால் பேருந்துகளுக்கு அதிக வசூல் கிடைத்தது. நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்தை தவிர மற்ற எந்த இடங்களிலும் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் ரூ. 30 ஆயிரம் வசூல் செய்த பேருந்துகள் ரூ.15 முதல் ரூ.20 ஆயிரம் மட்டுமே வசூலாகிறது. இதனால் தினசரி புதுக்கோட்டை போக்குவரத்து துறைக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக நாள் ஒன்றுக்கு ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் பேருந்து நிலையத்தில் மட்டுமே ஏறமுடியும் என்ற சூழ்நிலையால் சிறமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அதிகாரிகள் இந்த நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றனர். சட்டப்படி இயக்கவில்லைஒரு பயணிகள் பேருந்து இயக்க வேண்டுமானால் சாலை போக்குவரத்து சட்டப்படி கண்டிப்பாக பயணிகளின் நலன் கருதி நடத்துனர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை அரசு துறை கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறையே செய்வது வேடிக்கையாக இருக்கிறது எனறு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : Passengers ,government ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்