×

அரிமளம் அருகே கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்கள் இன்னும் சீரமைக்கப்படாத அவலம் கலெக்டரிடம் மனு அளித்தும் பயனில்லை

திருமயம், மே 23: அரிமளம் அருகே கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்ய கலெக்டரிடம் மனு கொடுத்து பயனில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள தாஞ்சூர், மணப்பட்டி, சாமந்தான்பட்டி, கரையப்பட்டி, துறையூர், இசுகுபட்டி, செம்பட்டாவயல், நாகரத்தினம் பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு அதிகளவு போக்குவரத்து வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த புதுக்கோட்டை-கே.புதுப்பட்டி சாலையில் உள்ள வையாபுரிபட்டிக்கு வருகின்றனர். இந்நிலையில் வையாபுரிபட்டியில் இருந்து தாஞ்சூர் செல்ல சுமார் ஒரு கிலோ மீட்டர் புதர் செடிகள் படர்ந்த வயல்களுக்கு இடையில் செல்லும் சாலையில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தாஞ்சூர் சாலையில் அதிகளவு பாம்புகள், விச பூச்சிகள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அப்பகுதி வையாபுரிபட்டியில் இருந்து தாஞ்சூர் வரை தெருவிளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து 10க்கும் மேற்பட்ட தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. இதில் இரவு நேரங்களில் தாஞ்சூர் சாலையை கடக்கும் அப்பகுதி மக்களுக்கு விஷ ஜந்துக்களிடம் இருந்து அச்சத்தை போக்கியது. இதனிடையே கடந்த ஆண்டு தாஞ்சூர் பகுதியில் வீசிய கஜா புயல் காரணமாக தாஞ்சூர் சாலையில் 4 மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்ததோடு, மின்கம்பிகளும் அறுந்து விழுந்து சேதமடைந்தது.

இதனை தொடர்ந்து புயல் வந்து 6மாதங்களை கடந்த நிலையில், சேதமடைந்த மின்கம்பங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாஞ்சூர் சாலை மின் விளக்குகளின்றி மீண்டும் இருளில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள்  அச்சத்துடன் சாலையை கடந்து வருகின்றனர். இந்நிலையில் சேதமடைந்த மின்கம்பங்களை சரி செய்து மின் விளக்குகளை மீண்டும் ஒளிர செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் 3 முறை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும், அதிகாரிகள் இதுநாள் வரை கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலும் தாமதிக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : storm ,Arimala ,Ghazi ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...