×

பெரம்பலூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல்சுற்று விவரம் காலை 9.30 மணிக்கு தெரியும்

பெரம்பலூர், மே 23: பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. முதல்சுற்று விபரம் காலை சரியாக 9.30மணிக்குத் தெரிய வரும். பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. இதையடுத்து பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, குளித்தலை, பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரம்பலூர் கொண்டு வரப்பட்டன. அதன்படி தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி தரைதளத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, முதல்தளத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி, 2ம் தளத்தில் முசிறி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியின் தரைதளத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி, முதல்தளத்தில் துறையூர் சட்டமன்ற தொகுதி, 2ம் தளத்தில் லால்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தபட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வி.வி.பேட் கருவிகள் பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.

பெரம்பலூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதையொட்டி 7.30 மணியளவில் இந்த 2 கட்டிடங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் இருந்து பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தா, தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி, எஸ்பி திஷாமித்தல், சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சீலை உடைத்து பூட்டை திறந்து 2 கட்டிடங்களில் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பார். அங்கு ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும் அமைக்கப்பட்ட தலா 14 மேஜைகளில் வைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சரியாக 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். இதில் பெரம்பலூர், துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ண துவங்கிய அதே வேளையில் தபால் ஓட்டுகளும் 8 மணிக்கு எண்ண துவங்குவர். இதன் காரணமாக லால்குடி சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை அரை மணி நேரம் தாமதமாக எண்ணப்படும். பிறகு லால்குடி சட்டமன்ற தொகுதி முதல் சுற்று எண்ணிக்கை தெரிந்தபிறகு 6 தொகுதிகளின் முதல்சுற்று மொத்த வாக்குகள் கணக்கிடப்பட்டு அவை முதலில் சுவிதா போர்ட்டல் என்ற ஆப்பில் பதி வேற்றம் செய்வர். அதன்பிறகே வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்படும். பிறகு ஒலிபெருக்கி மூலமும் தெரிவிக்கப்படும். இதனால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் முன்பே சுவிதா போர்ட்டல் ஆப் மூலம் உடனுக்குடன் இந்தியா முழுவதுக்குமான ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

அதோடு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கட்டாயமாக எண்ண வேண்டிய குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 வாக்குச்சாவடிகளின்    VVPAT Slip எண்ணிக்கையை மேற்கொள்வார்கள்.
தபால் வாக்குகள்... பெரம்பலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அரசு ஊழியர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கான தபால் ஓட்டுகளுக்கான படிவங்கள் மொத்தம் 10,164 வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து நேற்று வரை 7,625 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல் படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட 842 தபால் வாக்குகளில் 437 வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இதன்படி 8,062 வாக்குகளோடு இன்று தபால் துறையால் வாக்கு எண்ணும் மையத்துக்கு நேரடியாக கொண்டு வந்து டெலிவரி செய்யப்படும் வாக்குகளும் சேர்த்து எண்ணப்படும்.

Tags : constituency ,round ,Perambalur Lok Sabha ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...