×

துறைமங்கலம் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

பெரம்பலூர், மே 23: பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் பகுதியில் போதுமான அளவு குடிநீர் வினியோகிக்காதது, கலங்கலாக  குடிநீர் வருவதை கண்டித்தும் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் பெரம்பலூர் நகராட்சி பெரிதும் திண்டாடி வருகிறது. நகரிலுள்ள 21வார்டுகளில், கடந்த ஒரு மாதத்திற்குள் துறைமங்கலம், வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, கம்பன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து 5முறைக்குமேல் சாலைமறியல் நடைபெற்றது.பெரம்பலூர் நகராட்சிக்கான எளம்பலூர் உப்போடை, செங்குணம் பிரிவுரோடு, துறைமங்கலம் கலெக்டர் அலுவலக வளாகம், ஆலம்பாடிசாலை, ஆத்தூர்சாலை உள் ளிட்ட  பல்வேறுபகுதிகளில் 20க்கும் மேற்பட்ட குடிநீர்க்கிணறுகள் உள்ளன. இருந்தும் பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு போதுமான குடிநீர் வினியோகிக்க முடியாததால், கடந்த திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, கொள்ளிடம்ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது.

இருந்தும் கடந்த 2வருடங்களாகப் பருவமழை பெய்யாததால் கடுமையான வறட்சியால் தேவையான குடிநீரை விநியோகிக்க முடிவதில்லை. பெரம்பலூர் நகராட்சி 9வதுவார்டு துறைமங்கலம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் முறையாக குடிநீர் வினியோகிக்காததை கண்டித்து சாலைமறியல் நடத்தப்பட்டது. அப்போது வாக்குறுதி அளித்த நகராட்சிஅதிகாரிகள் பின்னர் முழுமையாக  குடிநீர் விநியோகிக்காமல் மெத்தனமாக இருந்ததாலும், குறைந்தளவு விநியோகித்த குடிநீரும் கலங்கலாக இருந்ததாலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 7.15மணிமுதல் 3ரோடு பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.     இதனால் பெரம்பலூரிலிருந்து திருச்சி, அரியலூர் மார்க்கங்களில் செல்லும் அனை த்து பேருந்துகளும் செல்லமுடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குசென்ற பெரம்பலூர் டவுன் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இன்று (23ம் தேதி) வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைநடத்தி முறைப்படி குடிநீர் வினியோகிக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் பெரம்பலூர்-திருச்சி சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா