×

வயலில் மண் வளமாக இருக்கா? விவசாயிகள் ஆய்வு செய்யலாம்

சிவகங்கை, மே 23: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களின் மண்ணை ஆய்வு செய்ய வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மண்ணில் தழைச்சத்து(நைட்ரஜன்) குறைவாகவும், மணிச்சத்து(பாஸ்பரஸ்) மத்திமமாகவும், சாம்பல்சத்து (பொட்டாஷ்) அதிகமாகவும் காணப்படுகிறது. மண்வளத்தை பாதுகாக்கவும் ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்திடவும் தேசிய மண்வள இயக்கத்தின் மூலம் மண் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து தேசிய மண்வள இயக்கத்தின் கீழ் ‘கிரிட்’ முறையில் மண் மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. கிராமங்களின் வரைபடங்களை மையமாக வைத்து, மண் மாதிரிகளை சேகரித்து பிரச்சனை உள்ள மண்ணை கண்டறிந்து, சீர்செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆய்வு செய்வதால் மண்ணில் உள்ள சத்துக்கள் கண்டறியப்பட்டு, பயிர்களுக்கு தேவையான உரத்தை மண்ணில் இடலாம்.

இதன் மூலம் உரங்களின் அளவு குறைவதோடு, செலவும் குறைந்து மண் வளம் பாதுகாக்கப்பட்டு உற்பத்தி அதிகமாகும். மண்வள அட்டை பெறுவது உள்ளிட்ட பல்வேறு விவசாய நலத்திட்டங்களை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : field ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது