×

கொள்ளிடம் பகுதியில் அறிவிப்பில்லாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதி

கொள்ளிடம், மே 23:   கொள்ளிடம் பகுதியில் கடந்தசில தினங்களாக ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்தடையால் மாணவர்கள் பொதுமக்கள் மிகுந்த  சிரமம் அடைந்து வருகின்றனர்.நாகை மாவட்டம், கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. மின்சாரம் இடையிலேயே தடைபடுவதால் வீடுகளில் மின்விசிறி செயல்படாமல் கொசுக்கடியால் அவதிப்படும் நிலையும், காலைப்பொழுதில் ஏற்படும் திடீர் மின்தடையால் கிராமங்களுக்கு வழக்கமாக பொதுக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்து அனுப்புவதற்கு மின்சாரம் தடைபடும் பொழுது மின்மோட்டார் இயங்காமல் போகிறது. இதனால் வழக்கமாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுவதால் கிராம மக்கள் அவதியடைகின்றனர்.

இதேபோல் கொள்ளிடம் கூட்டு குடிநீர்த்திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் உரிய நேரத்தில் சென்று சேருவதில் தடையும் தாமதமும் ஏற்படுகிறது. மின்தடையால் பள்ளி மாணவர்கள் உரிய சான்று வேண்டி இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க சிரமம் அடைந்து வருகின்றனர். மின்தடையால் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட்கார்டை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை உரிய நேரங்களில் வாங்க முடியாமல் குடும்ப அட்டைதாரர்கள் அவதிப்படுகின்றனர். தற்பொழுது குறுவை சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டும் வேளையில் மின்தடையால் மின்மோட்டார் இயங்காமல் போவதால் தண்ணீரை பயன்படுத்தி விவசாய பணியை மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இணையதளத்தின் மூலம் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் செய்வதும் மின்தடையால் தாமதமாகிறது. எனவே அடிக்கடி மின்தடை ஏற்படாதபடி தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Tags : coconut area ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து பயிரில்...