×

காரைக்குடி பஸ் ஸ்டாண்டிற்கு இரவு 12.30க்கு மேல் வந்தால் ‘நோ பஸ்’ விடியவிடிய காத்திருக்கும் பயணிகள்

காரைக்குடி, மே 23: காரைக்குடியில் இருந்து இரவு 12.30 மணிக்கு மேல் எந்த ஊருக்கும் செல்ல பஸ் இல்லாததால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் 4 மணி  நேரம் பஸ் ஸ்டாண்டில்  காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க இரவு நேர பஸ் சர்வீஸ் தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடியில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளதால் இப்பகுதி மாவட்டத்தில் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. தவிர இங்குள்ள ஆன்மீக தலங்கள் மற்றும் அரண்மனை போன்ற வீடுகளை பார்வையிட பல்வேறு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் வந்த செல்கின்றனர்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கிருந்து  மதுரை, கோவை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, பழனி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்படுகிறது. இப்பஸ் வசதி அதிகாலை 3 மணிக்கு துவங்கி இரவு 12.30 வரை மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் 12.30 மணிக்கு மேல் ஏதாவது ஒரு ஊரில் இருந்து காரைக்குடி வரும் பயணிகள், இங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்ல அதிகாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தவிர ஏதேனும் அவசர தேவைக்கு என இரவு நேரங்களில் பயணம் செய்ய வேண்டும் என்றால் வாடகை கார் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். எனவே வளர்ந்து வரும் இப்பகுதியில் இருந்து இரவு நேர பஸ் சர்வீஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  காரைக்குடியை சேர்ந்த வெங்கட்பாண்டி கூறுகையில், இரவு 12.30க்கு மேல் பஸ் இல்லாததால் அதிகாலை 3 மணி வரை சுமார் 4 மணி நேரம் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தவிர திருச்சியில் இருந்து சென்னைக்கு அதிகாலை செல்லும் ரயிலை பிடிக்க வேண்டும் என்றால் இரவு 2 மணிக்கு புறப்பட வேண்டிய நிலை உள்ளது.  பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்கள் பஸ் இல்லாமல் பரிதவிக்கும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது என்றார்.

Tags : passengers ,Karaikudi ,bus stand ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி