×

அகில இந்திய கூடைப்பந்து போட்டி இந்தியன் வங்கி அணி சாம்பியன்

பெரியகுளம், மே 23: பெரியகுளத்தில் நடைபெற்ற அமரர் பி.டி.சிதம்பரசூரியநாராயணன் சுழற்கோப்பைக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. கடந்த மே 15ந்தேதி முதல் மே 21ந்தேதி வரை போட்டிகள் நடைபெற்றன. அகில இந்திய அளவில் தலைச்சிறந்த அணிகள் விளையாடின. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் மாலை இறுதி போட்டிகள் துவங்கியது. ஜே.சி.குழுமத்தின் ஹேமந்த் போட்டியை துவக்கி வைத்தார். தேனி அருண் மோட்டார்ஸ் உரிமையாளர் பவுண் கோயபல்ஸ் முன்னிலை வகித்தார்.

லீக் சுற்றின் இறுதி போட்டிகளில் நடைபெற்ற முதல் போட்டியில் புதுடெல்லி இந்திய தரைப்படை அணி 105 புள்ளிகள் எடுத்து எதிர்த்து ஆடி 82 புள்ளிகள் எடுத்த செகந்திராபாத் ஏஓசி அணியினை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணி 98 புள்ளிகள் எடுத்து எதிர்த்து ஆடி 61 புள்ளிகள் எடுத்த பெங்களுர் பேங்க் ஆப் பரோடா அணியை வென்று முதலிடத்தைப் பெற்றது.

வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை ஹேமந்த் வழங்கினார். முதல் பரிசு ரூ. 60 ஆயிரம் மற்றும் பி.டி.சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பையினை சென்னை இந்தியன் வங்கி அணிக்கும், இரண்டாம் பரிசு ரூ. 40 ஆயிரம் மற்றும் வடுகபட்டி அமரர் அழகு சங்கரலிங்கம் செட்டியார் நினைவு சுழற்கோப்பையினை பெங்களூரு விஜயா வங்கி அணிக்கும், 3வது பரிசு ரூ.30 ஆயிரம் மற்றும் அமரர் பொன்னையா நாயுடு சீத்தம்மாள் நினைவு சுழற்கோப்பையினை புதுடெல்லி இந்திய தரைப்படை அணிக்கும், நான்காவது பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் அமரர் பாலசுப்பிரமணியன் நினைவு சுழற்கோப்பையினை செகந்திராபாத் ஏஓசி அணிக்கும் வழங்கினர்.

சிறந்த அப்பென்ஸ் பிளேயருக்கான பரிசு இந்தியன் வங்கி அணியின் புவனேஷ்வர், சிறந்த டிப்பன்ஸ் பிளேயருக்கான பரிசு புதுடெல்லி இந்திய தரைப்படை அணியின் ஐசக், சிறந்த பால் ஹேண்ட்லர் பரிசு இந்தியன் வங்கியின் பாலதனேஷ்வரன்,சிறந்த ப்ரீ துரோவிற்கான பரிசு இந்திய தரைப்படை அணியின் கோபால்ராம் ஆகியோர் பெற்றனர். சிறந்த விளைட்டு வீரருக்கான ஸ்கூட்டர் பரிசு, தேனி அருண் மோட்டார்ஸ் உரிமையாளர் பவுண்கோயபல்ஸ் சென்னை இந்தியன் வங்கி அணியின் ஹரிராமிற்கு வழங்கினர். விளையாட்டுப்
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சில்வர் சூப்லி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலர் சிதம்பரசூரியவேலு, தலைவர் அமர்நாத், துணைத்தலைவர் அபுதாகிர், பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Indian Basketball Competition Indian Bank Team ,
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது