×

சுருளி அருவி கோயில் பூசாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 20 நாட்களாக போலீஸ் திணறல்

கம்பம், மே 23: சுருளி அருவி பூதநாரயணன் கோயில் பூசாரி கொலை வழக்கில், மூன்று வாரங்களாகியும் குற்றவாளிகளை பிடிக்கமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் சிறப்பு மிக்கது சுருளி நீர்வீழ்ச்சி. இது சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. இங்கு பூதநாராயணன் கோயில், ஆதிஅண்ணாமலையார் கோயில், சுருளிவேலப்பர் கோயில், சுருளிமலை ஐயப்பசாமி கோடியல் மற்றும் கைலாய நாதர்குகை உள்ளன.சுருளி நீர்வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும். இங்கு சித்திரை, தை பூசம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற முக்கிய விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள பூதநாரயணன் கோயிலில் கடந்த 3ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கொள்ளையடிக்க முயன்றனர். இதை தடுத்த பூசாரி மலையன்(70) படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு பூசாரி பாலசுப்பிரமணி(59) படுகாயமடைந்தார். இந்த கொலை தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இரண்டு வாலிபர்கள் கோயிலுக்குள் செல்வது தெரிந்தது. ஆனால், அவர்களின் முகம் தெளிவாக தெரியாததால் கேமரா பதிவிலுள்ள குற்றவாளிகளின் உயரம், உருவம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அருகில் உள்ள கேஎம்.பட்டி, கேஜி.பட்டி பகுதிகளில் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்கவில்லை.

போலீசார் இந்த வழக்கில் சேகரித்த கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததிலும், போலீசாருக்கு சாதகமான தகவல் கிடைகிகவில்லை. இதனால் எவ்வித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். தேனி எஸ்பி, உத்தமபாளையம் டிஎஸ்பி கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றும், சுருளி அருவியை போலீசாரின் கண்காணிப்பில் கொண்டு வந்தும் வழக்கில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதுவரை கம்பம், கூடலூர் உட்பட பல பகுதிகளில் சந்தேகதிற்கிடமாக சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து பத்துக்கும் மேற்பட்ட நபர்களை கொண்டு வந்து விசாரித்தும் குற்றவாளி சிக்கவில்லை. இதனால் பூசாரி கொலை வழக்கில் இருபது நாட்களாகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். இது பல்வேறு பகுதிகளில் இருந்து சுருளி அருவிக்கு வரும் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : shrine ,
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது