×

வாக்காளர்களிடையே பரபரப்பு ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் தேனியில் 20 இடங்களில் வாகனச்சோதனை

தேனி, மே 23: தேனி மக்களவை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுவரை ஒட்டி நேற்று மதியம் முதல் போலீசார் மாவட்டத்தில் 20 இடங்களில் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடுவிலார்பட்டி ரோட்டில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் கூறியதாவது: தேனி மக்களவை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று தேனி அருகே கொடுவிலார்பட்டி சாலையில் உள்ள கம்மவார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் எண்ணப்படுகின்றன. இங்கு தேனி மக்களவை தொகுதி மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.

இதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஆயுதப்படை உட்பட 1200 போலீசார் இங்கு மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்னை செய்ய ஒரு தரப்பினர் கிராமம் தோறும் 10 முதல் 20 பேரை அழைத்துக் கொண்டு வர உள்ளதாக உளவுத்துறை மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தடுக்க மாவட்டத்தில் 20 இடங்களில் போலீசார் நேற்று மதியம் முதல் வாகனச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அத்தனை சாலைகளிலும் இந்த சோதனை நடக்கிறது. யாராவது சந்தேகப்படும் படியாக ஆயுதங்களுடன் வந்தால் உடனே கைது செய்யப்படுவார்கள். ஓட்டு எண்ணும் மையத்திற்குள் பிரச்னையை தடுக்க வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் முகவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை.

மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்களை தவிர வேறு யாரும் வாகனங்களில் உள்ளே வர முடியாது. வேட்பாளர் அரசியல் கட்சியினர் வாகனங்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து ரோட்டின் இருபுறமும் 200 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்படும். வேட்பாளரை தவிர வேறு யாரும் அலைபேசி எடுத்து வர அனுமதியில்லை. வேட்பாளரின் முகவர்கள் பென்சில், பேப்பர் தவிர வேறு எதுவும் எடுத்து வரக்கூடாது.

எந்த அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படாது. எனவே பொதுமக்கள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வர வேண்டாம். இன்று அதிகாலை முதல் தேனியில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் வாகனங்களும், கொடுவிலார்பட்டியில் இருந்து தேனி வரும் வாகனங்களும் அரண்மனைப்புதுார், வயல்பட்டி வழியாக திருப்பி விடப்படும். ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் உடனே இந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் மைக் மூலம்் பொதுமக்களுக்கு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவிர கம்ப்யூட்டர் மற்றும் அலைபேசியில் சுவீதார் அப்ளிகேஷனை டவுன் லோடு செய்து அதில் சிட்டிசன் போர்ட்ஸ் என்ற ஆப்சனுக்குள் சென்று பொதுமக்கள் தேர்தல் முடிவுகளை அறியலாம். ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி கம்ப்யூட்டரில் முடிவுகளை ஏற்றும் போதே இந்த அப்ளிக்கேஷனில் முடிவுகள் தெரிந்து விடும். நிருபர்கள், டிவிக்களில் வெளியாகும் முன்னரே இதன் மூலம் பொதுமக்கள் முடிவுகளை அறியலாம். இவ்வாறு எஸ்.பி கூறினார்.

Tags : places ,voters ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...