×

வைகை அணையில் கலக்கும் கொட்டகுடி ஆற்று கழிவுநீர்

தேனி, மே 23: முல்லை பெரியாறு, வைகை ஆறுகளில் நீர் வரத்து முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் கொட்டகுடி ஆற்றில் வரும் கழிவுநீர் வைகை ஆற்றின் வழியாக அணையில் தேங்கி கிடக்கும் நீரில் கலந்து வருகிறது. தேக்கடி அணையில் தொடங்கும் முல்லை பெரியாறும், குரங்கணி மலைப்பகுதியில் தொடங்கும் கொட்டகுடி ஆறும் தேனியில் அரண்மனைப்புதுாரில் சந்தித்து ஒரே ஆறாக வந்து அம்மச்சியாபுரம் அருகே வைகை ஆற்றுடன் சேர்கிறது. பின்னர் இந்த நீர் வைகை அணைக்கு செல்கிறது.

தற்போது முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 112.15 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இந்த நீர் உத்தமபாளையத்தை கூட எட்டாது. அடுத்து வரும் நீர் முழுக்க கழிவு நீராகவே வருகிறது. அதேபோல் போடி மற்றும் தேனி சாக்கடைகள் முழு அளவில் கொட்டகுடி ஆற்றில் கலக்கிறது. இந்த சாக்கடை நீரும், பெரியாற்றில் கலந்து வரும் சாக்கடை நீரும் அரண்மனைப்புதுாரில் இணைந்து வைகை ஆற்றுக்கு வந்த அணைக்கு செல்கிறது.

ஆற்றுநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை விடுத்த கோரிக்கையினை எந்த உள்ளாட்சியும் கண்டுகொள்ளவில்லை. வைகை அணையில் இருந்த மதுரை மற்றும் ஆண்டிபட்டி சேடபட்டி, தேனி குடிநீர் திட்டங்களுக்கு நீர் எடுக்கப்படுகிறது. தற்போது வைகை நீர் மட்டம் 36.31 அடியாக உள்ளது. இதில் 16 அடி வரை தண்ணீரும் அதற்கு கீழே கழிவுகளும் தான் உள்ளன. இப்போது கொட்டகுடி, பெரியாறுகளின் வழியாக வரும் கழிவுநீரால் வைகை அணையில் தேங்கி நிற்கும் சிறிதளவு தண்ணீரும் மாசுபட்டு வருகிறது. இதனை தடுக்கும் வழிமுறைகள் தெரியாமல் பொதுப்பணித்துறை தவித்து வருகிறது.

Tags : dam ,Vaigai ,
× RELATED வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு