×

மூடிக்கிடந்த தொட்டில் குழந்தை மையம் திறப்பு

தர்மபுரி, மே 23:  தினகரன் செய்தி எதிரொலியாக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் மூடிக்கிடந்த தொட்டில் குழந்தை மையம் மீண்டும் திறக்கப்பட்டது. தமிழகத்திலேயே தர்மபுரி மாவட்டத்தில் தான், பெண் சிசுக்கொலை அதிகமாக நடந்தது. பெண் குழந்தைகளின் பிறப்பு சராசரி விகிதம் சரிந்ததையடுத்து, கடந்த 2002ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தொட்டில் குழந்தை திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்திலேயே முதலாவதாக, தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனையில் தொட்டில் குழந்தை மையம் திறந்து வைக்கப்பட்டது. கடந்த 16 வருடங்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், இந்த மையத்தில் சேர்க்கப்பட்டன. மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வந்த தொட்டில் குழந்தை மையத்தில், செவிலியர் இல்லாத காரணத்தால் கடந்த ஓராண்டாக மூடியே கிடந்தது. இதனால், இங்கு குழந்தைகளை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த மையம் மூடிக்கிடப்பதால், தனக்கு தேவைப்படாத குழந்தையை யாரிடம் கொண்டு போய் கொடுப்பது என தெரியாமல், சில பெற்றோர் தவித்தனர். இதை தொடர்ந்து, தங்கள் குழந்தையை தொட்டில் குழந்தை மையத்தில் சேர்ப்பதை  தவிர்த்து வந்தனர். இது தொடர்பாக தினகரன் நாளிதழில், கடந்த 6ம் தேதி செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, மீண்டும் அரசு மருத்துவமனையில் தொட்டில் குழந்தை மையம் திறக்கப்பட்டது. தொட்டில் குழந்தை மையத்தில், சமூக நலத்துறையில் பணியாற்றும் கிராம சேவகி கோதை என்பவர் தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ளார்.

Tags : child center opening ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா