×

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இரவு 8 மணிக்குள் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்

விருதுநகர், மே 23:விருதுநகர் தொகுதி வாக்குள் இரவு 8 மணிக்குள் எண்ணி முடிக்கப்படும். அதிகபட்சமாக திருமங்கலம் தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளிலும், குறைந்தபட்சமாக அருப்புக்கோட்டை தொகுதி 18 சுற்றுகளிலும் எண்ணி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இவற்றில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் தொகுதியிலும், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகள் தென்காசிதொகுதியிலும் இடம் பெற்றுள்ளன. விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகள் விருதுநகர் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 7,24,093, பெண் வாக்காளர்கள் 7,56,377, திருநங்கைகள் 130, மொத்த வாக்காளர்கள் 14,80,600 பேர் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 5,19,700 பேரும், பெண்கள் 5,46,508பேரும், திருநங்கைகள் 9 பேரும் ஆக மொத்தம் 10,66,217 பேர் வாக்களித்துள்ளனர். சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்காளர்களில் ஆண்கள் 1,15,388, பெண்கள் 1,21,288, இதரர் 20 மொத்தம் 2,36,696 பேர். இதில் பதிவான வாக்குகள் ஆண்கள் 88,472 பெண்கள் 98,388, திருநங்கை 1 மொத்தம் பதிவான வாக்குகள் 1,86,861.

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வாக்குகள் விருதுநகர் வெள்ளைச்சாமிநாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் செந்திக்குமார நாடார் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு துவங்க உள்ளன. 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். சரியாக 8.30 மணியளவில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணும் பணிகள் துவங்கும்.

விருதுநகர் தொகுதியில் 28 வேட்பாளர்களும், ஒரு நோட்டோவும் ஆக மொத்தம் 29 ஓட்டுக்களும் ஒவ்வொரு சுற்றும் எண்ணி முடிக்கப்பட்டு ஏஜெண்டுகளிடம் கையொப்பம் வாங்கிய பின்பு அடுத்த சுற்று எண்ணப்பட உள்ளன. விருதுநகர் தொகுதியில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளும், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குகள் 22 சுற்றுகளும், விருதுநகர் தொகுதி வாக்குகள் 19 சுற்றுகளும், அருப்புக்கோட்டை 18 சுற்றுகளும், சாத்தூர் 21 சுற்றுகளும், சிவகாசி தொகுதி 20 சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட உள்ளன.

மின்னணு வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகளின் விவிபேடுகளில் பதிவான ஓட்டு சீட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு சான்றிதழ் தரும் பணி இரவு 8 மணிக்குள் நிறைவடைய வாய்ப்புள்ளது. பிரச்னைகள் ஏற்பட்டால் வாக்கு எண்ணிக்கை இரவு 11 மணி வரை காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் உதவி தேர்தல் நடத்து அலுவலர் தவிர பிற பணியாளர்கள், ஏஜென்டுகள் யாரும் உள்ளே செல்போன்கள், சிகரெட்டு, புகையிலை வஸ்துக்கள் என எதுவும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது. மையத்திற்குள் அரசு வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் அனுமதிக்கப்படாது. 

Tags : constituency ,Virudhunagar ,
× RELATED எடப்பாடி பிரதமராக வாய்ப்பிருக்கு…: ஜோசியம் சொல்லும் பிரேமலதா