×

பாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்

விருதுநகர், மே 23: வாக்கு எண்ணும் மையத்திற்குள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படை, ஆயுதப்படை போலீசார் என 1,080 பேர் பாதுகாப்பிற்காகவும், நகருக்குள் 620 போலீசார் என 1,700 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் செந்திக்குமார நாடார் கல்லூரியிலும் இன்று எண்ணப்பட உள்ளன.

இரு மையங்களிலும் வாக்கு எண்ணும்போது பாதுகாப்பு பணியில் எஸ்.பி. ராஜராஜன் தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகமது அஸ்லம் முன்னிலையில் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிஎஸ்பிகள் சமூகநீதி பிரிவு விஜயகுமார், குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் கண்காணிப்பில் 747 போலீசார் அதிகாலை 5 மணி முதல் ஈடுபட்டுள்ளனர்.

செந்திக்குமார நாடார் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆயுதப்படை டிஎஸ்பி சிவக்குமார், நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி பீர்மைதீன் ஆகியோர் கண்காணிப்பில் 343 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் வாக்குப்பெட்டி பாதுகாப்பு மையம் மற்றும் எண்ணும் இடங்களில் 22 துணை ராணுவப்படைப்பிரிவினரும், 35 தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இரு மையங்களிலும் வெடிகுண்டு படைப் பிரிவு போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

நுழைவு வாயில்களில் மெட்டல் டிடக்டர் கருவிகள் மூலம் முழு சோதனைக்கு பின்பே  ஏஜென்டுகள் முதல் அதிகாரிகள் வரை உள்ளே செல்ல அனுமதிப்படுவர். ஏஜென்டுகள் அனுமதிச் சீட்டுடன் காலை 7.30 மணிக்குள் மையங்களில் இருக்க வேண்டும். அனுமதிச் சீட்டுகள் இன்றி வந்தால் உள்ளே அனுமதிக்கபட மாட்டார்கள். இதனை தவிர்த்து நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள 620 போலீசார் நிறுத்தப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்.

Tags : policemen ,
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...