×

காஞ்சிபுரம் தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 23: காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என சம்மேளனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிபுத்தூர் பட்டுப்புழு வளர்ப்பாளர்கள் மற்றும் பட்டு நூல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கே.மணிகண்டன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்காக பட்டு வளர்ப்பு துறையின் உதவி இயக்குநர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, சம்மேளனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான சம்மேளனத்தின் தேர்தல் அறிவிப்பை தேர்தல் அதிகாரி மார்ச் 6ம் தேதி வெளியிட்டார்.வில்லிபுத்தூர் பட்டுப்புழு வளர்ப்பாளர்கள் மற்றும் பட்டு நூல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான நானும், ஆர்.டி.சேகர், எம்.எஸ்.ஜெயபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல்
 செய்தோம்.ஆனால், எனது வேட்புமனுவில் 2 இயக்குநர்களின் கையெழுத்து இல்லை என காரணம் கூறி வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். நான் வேட்புமனுவில் 2 இயக்குநர்களின் கையெழுத்தை வாங்குவதற்கு முன்பே தேர்தல் அதிகாரி எனது வேட்புமனுவை வாங்கிவிட்டார்.

இதையடுத்து உடனடியாக அவரிடம் முறையிட்டேன். ஆனால், எனது கோரிக்கையை நிராகரித்துவிட்ட தேர்தல் அதிகாரி ஆர்.டி.சேகரை தலைவராகவும், எம்.எஸ்.ஜெயபாலை துணைத் தலைவராகவும் தேர்வு செய்து அறிவித்துவிட்டார். தேர்வு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களில் 17 பேர் புதிதாக தேர்தலை நடத்துமாறு தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.ஆனால், இந்த கோரிக்கை மீதும் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விதிகளுக்கு முரணாக நடந்த இந்த தேர்தலுக்கான அறிவிப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் இயக்குநர்கள் கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சம்மேளனத்தின் தலைவராகவும், துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டவர்கள் வரும் ஜூன் 10ம் தேதிவரை சம்மேளனத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க கூடாது என கூறி இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.


Tags : Vice Chancellor Ban ,Kanchipuram Tamilnadu Cooperative Silk Manufacturers Federation ,Chennai High Court ,
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...