காஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடாது என சம்மேளனத்தின் தலைவர் மற்றும் துணை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிபுத்தூர் பட்டுப்புழு வளர்ப்பாளர்கள் மற்றும் பட்டு நூல் தொழில் கூட்டுறவு சங்க தலைவர் கே.மணிகண்டன் தாக்கல் செய்த மனு:  தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்காக பட்டு வளர்ப்பு துறை உதவி இயக்குநர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சம்மேளனத்தின் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்வு செய்வதற்கான சம்மேளனத்தின் தேர்தல் அறிவிப்பை தேர்தல் அதிகாரி மார்ச் 6ம் தேதி வெளியிட்டார். வில்லிபுத்தூர் பட்டுப்புழு வளர்ப்பாளர்கள் மற்றும் பட்டு நூல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான நானும், ஆர்.டி.சேகர், எம்.எஸ்.ஜெயபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தோம். ஆனால், எனது வேட்பு மனுவில் 2 இயக்குநர்களின் கையெழுத்து இல்லை என்று காரணம் கூறி வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். நான் வேட்பு மனுவில் 2 இயக்குநர்களின் கையெழுத்தை வாங்குவதற்கு முன்பே தேர்தல் அதிகாரி எனது வேட்புமனுவை வாங்கிவிட்டார்.

இதையடுத்து அவரிடம் முறையிட்டேன். ஆனால், எனது கோரிக்கையை நிராகரித்த தேர்தல் அதிகாரி ஆர்.டி.சேகரை தலைவராகவும், எம்.எஸ்.ஜெயபாலை துணைத் தலைவராகவும் தேர்வு செய்து அறிவித்துவிட்டார். தேர்வு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களில் 17 பேர் புதிதாக தேர்தலை நடத்துமாறு மனு கொடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கை மீதும் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விதிகளுக்கு முரணாக நடந்த இந்த தேர்தலுக்கான அறிவிப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் இயக்குநர்கள் கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சம்மேளனத்தின் தலைவராகவும், துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டவர்கள் வரும் ஜூன் 10ம் தேதி வரை சம்மேளனத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories: