ஸ்மார்ட் சிட்டி நடைபாதையில் உணவகங்கள் மாநகராட்சிக்கு நோட்டீஸ்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை, தி.நகர் சகத்துல்லா சாலை, கண்ணதாசன் சாலை உள்ளிட்ட 23 உட்சாலைகளில் ஓராண்டுக்கு முன்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சாலைகளில் நடைபாதைகள் பெரியளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு கற்கள் பொருத்துவது, கம்பிகள் வைப்பது என பல்வேறு வேலைகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிக்கப்பட்ட நடைபாதைகளில் சாப்பாடு கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் பாதசாரிகள் நடைபாதையை உபயோகிக்க முடியாமல் கடும் சிரமமடைந்து வருகின்றனர். பாதசாரிகளுக்கு அமைக்கப்பட்ட நடைபாதையை உணவகங்கள் அபகரித்துள்ளனர். இது பாதசாரிகளுக்கு அமைக்கப்பட்டதா? இல்லை, உணவகங்களுக்கு அமைக்கப்பட்டதா? என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதுவரை எந்த அதிகாரிகளும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

குறிப்பாக சதக்கத்துல்லா சாலை, மூப்பரப்பன் தெரு ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் சாப்பாட்டு கடைகள் அபகரித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டிக்காக கம்பிகள் பொருத்தி அமைக்கப்பட்ட நடைபாதை அதற்காகவே அமைத்ததுபோல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த செய்தி நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருந்தது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயசந்திரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி, சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

Related Stories: