கணவன் இறந்த நிலையில் கடன் தொல்லை அதிகரிப்பு விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொலை

„ * தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடம்

* „ மதுரவாயல் அருகே பரிதாபம்

சென்னை: மதுரவாயல் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை போரூர் தாமஸ் தெருவை சேர்ந்தவர் சிபிராஜ் (38). இவரது 2வது மனைவி சைலஜா (29). இவர்களுக்கு லட்சுமி (4) என்ற மகளும், ஆதிதேஷ் (2) என்ற மகனும் இருந்தனர். சிபிராஜ் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கமிஷன் அடிப்படையில் கடன் வாங்கி கொடுக்கும் தொழில்  செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிட்னி பழுதடைந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சிபிராஜ் மாரடைப்பால் கடந்த பிப்ரவரி மாதம் இறந்தார். இதனால் சிகிச்சைக்காகவும், குடும்பத்திற்காகவும் சிபிராஜ் பல இடங்களில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சைலஜா, 2 குழந்தைகளை மிகுந்த சிரமத்துடன் வளர்த்து வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக்கேட்டு சைலஜாவிற்கு நெருக்கடி கொடுத்தாக கூறப்படுகிறது. வருமானமும் இல்லாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு வேலைக்கும் செல்ல முடியாமல் சைலஜா மிகவும் கஷ்டத்துடன் இருந்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த சைலஜா குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் லட்சுமி மற்றும் ஆதிதேஷ் ஆகிய இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் சைலஜா, தானும் விஷம் குடித்துள்ளார்.இந்நிலையில் சிபிராஜ் நண்பர் ஜினைத் என்பவர் கேரளாவில் இருந்து சிபிராஜ் வீட்டுக்கு நேற்று வந்துள்ளார். சைலஜா மற்றும் குழந்தைகளை  கேரளாவிற்கு அழைத்துச்செல்ல வந்துள்ளார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் பலமுறை கூப்பிட்டும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது குழந்தைகளும், சைலஜாவும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறினர். சைலஜா தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: