திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் பழுதடைந்த சிக்னலால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஆவடி: ஆவடி திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல் செயல்படாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை திருமுல்லைவாயல் வழியாக தினமும் கனரக வாகனங்கள், லாரிகள் அரசு தனியார் பேருந்துகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் திருமுல்லைவாயல் சந்திப்பு எப்போதும் பரபரப்பாக காணப்படும்.     இதனால் இந்த சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து சமீபத்தில் ₹10 லட்சம் செலவில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. மேலும் சிடிஎச் சாலையை சந்திக்கும் குளக்கரை சாலை, சோழம்பேடு  சாலை இரண்டும் அருகருகே இல்லாமல் தூரமாக உள்ளதால் சிக்னலை சரிவர பயன்படுத்த முடியாமல் சிக்னல் அமைத்தும் செயல்படாமல் பயனின்றி கிடக்கிறது.     எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து திருமுல்லைவாயல்  சந்திப்பில் உள்ள தானியங்கி சிக்னலை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும்,  காலை முதல் இரவு வரை போக்குவரத்து பிரிவு காவலர்கள் நின்று போக்குவரத்தை  சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருமுல்லைவாயல் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தானியங்கி சிக்னல்  அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சிக்னலில் நேரத்தை அளவிடும்  பிரச்னை, குறுக்கு சாலையில்  இரு சிக்னல் தனித்தனியாக தள்ளி இருப்பது போன்ற காரணத்தால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால் இந்த நான்கு முனை சந்திப்பில் பல்வேறு வகையான வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக  கடக்கின்றன. இதனால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களும் சந்திப்பை கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய போக்குவரத்து காவலர்கள் காலை முதல் இரவு வரை நிற்பது கிடையாது. மேலும் அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணி நேரம் மட்டும் நின்று போக்குவரத்தை ஒழுங்கு  படுத்துகின்றனர். மீதி நேரங்களில் சிக்னல் செயல்படாததால், வாகன ஓட்டிகள்  தங்களது இஷ்டத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிப்படைகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு புகார்கள் அனுப்பி உள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்’’ என்றனர்.

Related Stories: