விழுப்புரம்-புதுச்சேரி இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்

விழுப்புரம், மே 23: விழுப்புரம்-புதுச்சேரி இடையே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதுச்சேரிக்கு சென்று வருகின்றனர். புதுச்சேரியில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் வேலை வாய்ப்பிற்காகவும், அடுத்தபடியாக ஜிப்மர், ராஜிவ்காந்தி குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்டவைகள் இருப்பதாலும், மருத்துவ பயன்பாட்டிற்காகவும், ஆரோவில், கிழக்கு கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் இருப்பதாலும் தினசரி ஆயிரக்கணக்கானோர் புதுச்சேரிக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக வேலைவாய்ப்பு, மருத்துவம் தொடர்பாக காலை 6 மணி முதல் 10 மணி வரை புதுச்சேரிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கூட்டம் நிரம்பியே செல்லும். படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்துகொண்டு சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது.

ஏற்கனவே, விழுப்புரத்தில் இருந்து காலை நேரத்தில் இயக்கப்பட்ட ரயில் நேரமும் மாற்றப்பட்டதால் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் செல்கிறது. விழுப்புரத்தை அடுத்து கோலியனூர், கூட்ரோடு, வளவனூர் சென்றதும் பேருந்துகளின் மேற்கூரையில் ஏறியவாறு பயணிக்கும் நிலையும் இந்த வழித்தடத்தில் தொடர்கிறது. வேறு வழியில்லாமல் பயணிகள் இவ்வளவு கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து செல்கின்றனர். பெண்களின் நிலை படுமோசமாகவே உள்ளது.  இதே போல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் பேருந்துகளிலும் இதே நிலைதான். எனவே, கூட்ட நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் ஆகியவை கூடுதல் பேருந்துகளை காலை, மாலை நேரங்களில் இயக்கிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: