அனுமதியின்றி பயன்படுத்திய 10 மின்மோட்டார்கள் பறிமுதல்

கடலூர், மே 23: கடலூர் பாதிரிக்குப்பம் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி குடிநீர் எடுத்து வந்த பத்து மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் குடிநீரை பெருமளவு உறிஞ்சி சுயநலத்தோடு தங்கள் குடும்பங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பெரும்பான்மை வீடுகளுக்கு குடிநீர் கிடைக்க முடியாமல் போகிறது. எனவே இதுபோன்று சட்டவிரோத மின்மோட்டார்களை பறிமுதல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த பத்து நாட்களாக நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பயன்படுத்திய மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று  கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வட்டார மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா கங்கா, ஊராட்சி செயலாளர் வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் கடலூர்  பாதிரிக்குப்பம் விஜயலட்சுமி நகர், சண்முகாநகர் குடியிருப்பு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் குழாயில் அனுமதியின்றி மின்மோட்டார் பயன்படுத்தப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கைகள் அனைத்து பகுதிகளிலும் தொடரும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: