×

85 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சின்னசேலம், மே 23:   சின்னசேலம் பேரூராட்சி கடைகளில் 85 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.5,300 அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பொழிவு காலத்தில் நிலத்தின் மேல்மட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் படர்ந்து இருப்பதால் மழைநீர் சேமிக்கப்படாமல் வீணாகிறது. அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு சாப்பிடுவதால் கேன்சர் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதுடன், சாலைகள் குப்பை மேடாகிறது. இதையடுத்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கடந்த ஜனவரி மாதம் முதல் அரசு தடை விதித்தது. அந்த உத்தரவு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அமலில் உள்ளது. இருப்பினும் சின்னசேலம் பகுதியில் உள்ள ஒருசில கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதாக புகார் வருவதையடுத்து கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவின்பேரில், பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தல், அவர்களிடமிருந்து அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையில் பேரூராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சின்னசேலம் பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு) ஆறுமுகம் உத்தரவின்பேரில், தலைமை எழுத்தர் விழிச்செல்வன் மேற்பார்வையில் துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமரன், இளநிலை உதவியாளர் சரவணன், துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சின்னசேலம் பகுதியில் உள்ள மளிகை கடைகள், துணி கடைகள், உணவகங்கள், பேக்கரி ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர்.இதில் 85 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5300 அபராதம் வசூலித்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை