கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி, மே 23: கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 450 தனியார் பள்ளி பேருந்துகள் உள்ளது. இதில் முதல் கட்டமாக 130 பேருந்துகளை ஆய்வு செய்யும் பணி கள்ளக்குறிச்சி தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் நடந்தது. கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் காந்த் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன், கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார்.

சார் ஆட்சியர் காந்த் பேசுகையில், பள்ளிக்கு செல்ல நேரம் ஆகிவிட்டது என கூறி பேருந்தை அதிவேகமாக இயக்கக்கூடாது. மாணவர்கள் பாதுகாப்பு மிக முக்கியம். நமது மாவட்டம் விபத்து இல்லா மாவட்டமாக இருக்க வேண்டும், என்றார்.

டிஎஸ்பி ராமநாதன் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 230 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் விபத்து இல்லா மாவட்டமாக மாற்றியமைக்க வேண்டும். பள்ளி மாணவர்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது கவனமாக இறக்கிவிட வேண்டும். பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்கள் பாதுகாப்பாக சாலையை கடந்து சென்றுவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்னர் டிரைவர்கள் பேருந்தை இயக்க வேண்டும் என்றார்.  மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா பேசுகையில், பள்ளி பேருந்தில் ஆவணங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளபட்டது. பேருந்தில் உதவியாளர் இல்லாமல் வாகனத்தை இயக்கக்கூடாது. பின்புறமாக வாகனத்தை இயக்குகின்றபோது குழந்தைகள் யாரேனும் பின்பகுதியில் நிற்கிறார்களா என்பதை உதவியாளர்கள் மூலமாக பார்த்தபின் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வாகனத்திற்கான ஆவணங்கள் மற்றும் லைசென்ஸ் சரியாக உள்ளதா, பேருந்தில் அவசர கால கதவுகள் அமைக்கபட்டுள்ளதா, முதல் உதவி சிகிச்சை பெட்டி மற்றும் தீ தடுப்பு ஆவணங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். இதையடுத்து, பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விபத்து ஏற்பட்டால் முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, 108 ஆம்புலன்ஸ் மாவட்ட செயல் அலுவலர் அறிவுக்கரசு மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். மீதமுள்ள பேருந்துகள் ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: