×

வெற்றி பெறப்போவது யார்?

விழுப்புரம், மே 23: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெற்றி பெறப் போவது யார் என்ற முடிவு பிற்பகலிலேயே தெரிவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் ஒப்புகை சீட்டு எண்ணப்படுவதால் வாக்கு எண்ணிக்கை இரவு 12 மணி வரை நீடிக்கலாம் என ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நடக்கும் தேதிகளை கடந்த மார்ச் 10ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் வேலூரை தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. மாவட்டம் முழுவதும் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,227 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 77.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின. விழுப்புரம் மக்களவை தொகுதியில் மட்டும் 78.31 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள வாக்காளர்களில் ஆண்கள் 13,48,376 பேர், பெண்கள் 13,46,064 பேர் என மொத்தம் 26,94,828 வாக்காளார்கள் உள்ளனர். அதில் 21,00,799 பேர் வாக்களித்துள்ளனர். அதில் ஆண்கள் 10,38,564 பேரும், பெண்கள் 10,62,102 பேரும் வாக்களித்துள்ளனர். ஆண்களை விட 23,568 பெண்கள் அதிகளவு வாக்களித்திருந்தனர். இதனிடையே மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கையை பொறுத்து 14 முதல் 22 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியிலும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு அங்குள்ள ஏகேடி கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் துணை ராணுவம், ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள், முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்போன் கொண்டு செல்லக்கூடாது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், பேப்பர் மட்டுமே உள்ளே கொண்டு செல்லலாம். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் மேஜை வாரியாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்கள் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்படும்.
சுற்றுவாரியாக பெற்ற வாக்குகள் விவரம் அடங்கிய நகல் வேட்பாளர்களுக்கும், அவர்களுடைய முகவர்களுக்கும் அளிக்கப்படும். முதல் சுற்று முடிவுகள் சுமார் 10 மணி அளவில் தெரியவரும். பிற்பகல் முன்னணியில் இருக்கும் வேட்பாளர்களின் நிலவரம் தெரியவரும். மாலை பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி நிலவரம் தெரிந்துவிடும்.

பெரிய தொகுதியாக இருந்தால் வேட்பாளர்களின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு இரவு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வாக்காளர்களின் ஒப்புகை சீட்டு ஒரு சட்டமன்றதொகுதிக்கு 5 வாக்குப்பெட்டிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர நள்ளிரவு 12 மணியாகலாம் என ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபடும் முகவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி