5 விவிபாட் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு

காரைக்கால், மே 23:     காரைக்கால் மாவட்டத்தில் இன்று (23ம் தேதி) நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தை, தேர்தல் பார்வையாளர்கள் பிரசன்னா ராமசாமி, பாபுராவ் நாயுடு, கலெக்டர் விக்ராந்த்ராஜா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் பதிவான வாக்கு பதிவு முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று வாக்கு எண்ணிக்ைக நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை, புதுச்சேரி தேர்தல் பார்வையாளர்கள் பிரசன்னா ராமசாமி, பாபுராவ் நாயுடு, கலெக்டர் விக்ராந்த்ராஜா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

  ஆய்வுக்கு பின், மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ராந்த் ராஜா அளித்த பேட்டி: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ண, 2 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெடுங்காடு, திருநள்ளாறு சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஒரு மையத்திலும், காரைக்கால் தெற்கு, காரைக்கால் வடக்கு, நிரவி-திருமலைராயன்பட்டினம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றொரு மையத்திலும் எண்ணப்படும். ஒவ்வொரு மையத்திலும் 14 மேசைகள் என 28 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 ரவுண்டுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு தொகுதியிலும் 5 விவிபாட் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.

மேலும், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒரு நாள் முழுவதும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் துறையால் அனுமதிக்கப்பட்டவர்கள், முகவர்கள் உரிய அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே உரிய சோதனைக்கு பின் வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். முகவர் வெளியே சென்றால் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்காக, வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, வேட்பாளர்களின் முகவர்களுக்கு உரிய விலையில், தேநீர், உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.  ஆய்வின்போது, மாவட்ட துணை ஆட்சியர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: