மனைவியை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி,  மே 23: புதுவையில் நடந்த ெசஞ்சி டிரைவர் கொலையில் மனைவியை காவலில் எடுத்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபல  ரவுடியும், ஆயுள் தண்டனை கைதியுமான தமிழ்மணி ஐகோர்ட்டில் முன்ஜாமீன்  பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. புதுவை,  நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் வீதியைச் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன்  (35). விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை பூர்வீகமாக கொண்ட லாரி டிரைவரான இவர்,  கடந்த 6ம்தேதி கொலை செய்யப்பட்டார். சாக்கு மூட்டையில் கட்டி  வீசப்பட்ட அவரது சடலத்தை 100 அடி ரோடு வாய்க்கால் ஓரம் போலீசார் மீட்டனர்.  இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிந்து அவரது மனைவி  ஸ்டெல்லாவை உடனே கைது செய்தனர். ஸ்டெல்லாவின் அக்கா ஷெரீனா, சத்யா நகர்  ரவுடி தமிழ்மணி உள்ளிட்ட சிலரை போலீசார் தேடினர்.

 கமலக்கண்ணனின் உடலை  சாக்கடையில் வீச உதவிய ரவுடி தமிழ்மணியின் கூட்டாளியான அரியாங்குப்பம்  விமல்ராஜ் கடந்த 18ம்தேதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில்  மற்றொரு கூட்டாளியான குருசுகுப்பத்தை சேர்ந்த விக்கியை (28) தனிப்படை  தீவிரமாக தேடி வந்த நிலையில், ஏஎப்டி திடல் அருகே முதலியார்பேட்டை எஸ்ஐ  தமிழரசன் தலைமையிலான தனிப்படை நேற்று முன்தினம் கைது செய்தது. இவர்கள் 2  பேரும் டிரைவரின் உடலை வாய்க்காலில் வீச ரவுடிக்கு உதவியது தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவுடி தமிழ்மணி, ஸ்டெல்லாவின் அக்கா  ஷெரீனாவை ஆகியோரை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே  ஆயுள்தண்டனை கைதியாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கொலை  வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் ரவுடி தமிழ்மணி சென்னையில்  உள்ள உறவினர், நண்பர்கள் வீடுகளில் மாறிமாறி பதுங்கி ஐகோர்ட்டில்  முன்ஜாமீன் பெறும் திட்டத்தில் இறங்கியுள்ளதாக போலீசுக்கு தகவல்  கிடைத்துள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் சென்னையில்  முகாமிட்டு அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 இந்த  நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கமலக்கண்ணனின் மனைவி ஸ்டெல்லாவை காவலில்  விசாரிக்க முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான  போலீசார் கோர்ட்டில் முறையிட்டிருந்தனர். அதன்படி ஒருநாள் விசாரணைக்கு  மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கிய நிலையில் நேற்று முன்தினம் அவரை காலாப்பட்டு  சிறையில் இருந்து காவலில் எடுத்த போலீசார், இந்த கொலை தொடர்பாக சில  விசாரணைகளை அவரிடம் மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ய எந்த  இடத்தில், எப்போது அவர் பூச்சி மருந்தை வாங்கினார் என்பதை ஸ்டெல்லாவை  அப்பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்து தடயங்களை பதிவு செய்தனர்.  அப்போது அரியாங்குப்பத்தில் அவர் பூச்சி மருந்து வாங்கியது தெரியவந்தது.  இதேபோல் மேலும் சில விசாரணைகளை அவரிடம் மேற்கொண்ட போலீசார், மாலையே  விசாரணையை முடித்து மீண்டும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரை  காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: