×

பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும்

காரைக்கால், மே 23:    காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்க தலைவர் வின்சென்ட், செயலர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் முன்பே பள்ளி, கல்லூரி வாகனங்களை, வட்டார போக்குவரத்துறை சார்பில் முழுமையாக ஆய்வு செய்வது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வாகனங்கள் ஆய்வு முறையாக நடைபெறுவதில்லை. இதனால், பள்ளி, கல்லூரி வாகனங்களில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றுவது, அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது, முதல் உதவிப்பெட்டி, தீயணைப்பு சாதனம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செல்வது போன்ற மெத்தனப்போக்கு நீடிக்கிறது. இந்த ஆண்டு முதல் அவ்வாறான அலட்சியப்போக்கு இல்லாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வட்டார போக்குவரத்துறையை பள்ளிகள் துவங்கும் முன் போதுமான கால அவகாசம் எடுத்துகொண்டு முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளோம்.   குறிப்பாக, பள்ளி, கல்லூரி வாகனங்களின் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம், வாகனம் இயங்கும் நிலை, வாகன இருக்கை, பிரேக் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். சரியில்லாத வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது. மேலும், பள்ளி வாகனம், தனியார் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஏற்றி செல்லக் கூடாது. மாணவிகள் அதிகம் பயிலக்கூடிய பள்ளிகள், கல்லூரிகளில் காலை, மாலை இருவேளையும், பள்ளி வாயிலில் பெண் காவலர்களை பணியமர்த்தி, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என்றனர்.

Tags : School ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி