6 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை

புதுச்சேரி,  மே 23:   புதுச்சேரி மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில்  ெவற்றிபெறப் போவது யார்? என்பதற்கான வாக்கு எண்ணிக்கை 6 மையங்களில் இன்று  நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். இத்தேர்தல்  முடிவை அறிய வேட்பாளர்கள் மட்டுமின்றி மக்களும் ஆவலுடன் உள்ளனர். புதுவை மக்களவை தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களவை தேர்தலில் 81.19 சதவீத  வாக்குகளும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 77.66 சதவீத வாக்குகளும்  பதிவானது. 970 வாக்குச்சாவடியில் மொத்தம் 2 ஆயிரத்து 421 வாக்குப்பதிவு  இயந்திரம், 1,209 விவிபாட் இயந்திரம், 1147 கட்டுப்பாட்டு இயந்திரம்  பயன்படுத்தப்பட்டது. புதுவையில் 2 மையம், காரைக்காலில் 2, மாகே, ஏனாம்  தலா ஒரு மையங்களில் இந்த வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல்  முடிந்தவுடன் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

 அங்கு 3  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணிநேர கண்காணிப்பில் அதிகாரிகள், துணை  ராணுவம், காவல்துறை ஈடுபட்டது. இதனிடையே புதுச்சேரி வெங்கட்டா நகரில்  விவிபி பாட் குளறுபடி காரணமாக அங்கு கடந்த 12ம் தேதி மறுதேர்தல் நடத்தப்பட்ட  நிலையில் அந்த வாக்குப்பதிவு இயந்திரமும் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூமில்  வைக்கப்பட்டன. இந்த நிலையில்  புதுச்சேரி மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான  வாக்குகளின் எண்ணிக்கை 35 நாட்களுக்கு பின் இன்று 6 மையங்களிலும் சரியாக  காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 1,130 அரசு ஊழியர்கள், போலீசாரில் நேற்று  முன்தினம் வரை மொத்தம் 240 தபால் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ள நிலையில்,  இன்று காலை வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் மேலும் சில தபால்  ஓட்டுகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும்பட்சத்தில்  அவையும் கணக்கில் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். அதன்பிறகு வாக்குபதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்     பணி  தொடங்குகிறது. ஒவ்வொரு தொகுதி வாரியாக விவிபாட் பதிவையும் சரிபார்த்து  தேர்தல் முடிவின் சுற்றுகளை அறிவிக்க வேண்டியிருப்பதால் இந்தாண்டு மக்களவை  தேர்தல் முடிவை முழுமையாக அறிய மறுநாள் (24ம்தேதி) ஆகும் என மாவட்ட  தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.  

குலுக்கல் முறையில் 5 வாக்குப்பதிவு  இயந்திரத்தின் விவிபாட் இயந்திரங்கள் தேர்வு செய்து அதிலுள்ள உறுதி  சீட்டுகள் எண்ணிக்கை நடத்தப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் 4 சுற்று என  மொத்தமுள்ள 30 தொகுதிக்கு 120 சுற்றுகள் எண்ணப்பட்டு முடிவுகள்  வெளியிடப்படும். காலை 11 மணி முதல் மக்களவை தேர்தல் முடிவு முன்னணி நிலவரம்  தெரியும். அதேவேளையில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு  பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும்.

மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் காலை 5.30 மணிக்கே மையத்துக்குள் வர  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள்  அங்கு கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை தேர்தல் துறை பட்டியலிட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி தடுப்பு கட்டை  வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும்  ஏற்படுத்தப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் 23 சட்டசபையில் பதிவான  வாக்குகளும், காரைக்காலில் 5 சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளும்  எண்ணப்படும். மாகே, ஏனாமில் தலா ஒரு தொகுதியில் பதிவான வாக்குகள்  எண்ணப்படுகிறது. இதுதவிர தட்டாஞ்சாவடி சட்டசபை இடைத்தேர்தலில் பதிவான  வாக்குகள் மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனி அறையில்  எண்ணப்படுகிறது.

தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள அரசியல் கட்சிகள்  மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  அதேநேரத்தில் புதுச்சேரிக்கான கருத்து கணிப்பு முடிவுகள் இதுவரை யாருக்கும்  சாதகமாக வராத நிலையில் தேர்தலில் போட்டியிட்ட முன்னணி கட்சிகளின்  வேட்பாளர்கள் திக்... திக்... மனநிலையில் உள்ளனர். நாளை மாலையில் தான் எந்த  கட்சி வெற்றிவாகை சூடும் என்பது உறுதியாகி வெற்றி கொண்டாட்டங்கள்  களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாஸ்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம்

வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டையில் உள்ள அரசு  பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற இருப்பதால், போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. அதன்படி லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை மூடப்படுகிறது.  இதேபோல் நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி ரோடு முதல் நாவற்குளம்  சந்திப்பு வரையிலும், வள்ளலார் சாலையில் இருந்து உழவர்சந்தை வரையும்  போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து தடை உத்தரவானது  நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தேர்தல் எண்ணிக்கை முடியும் வரை  (24ம்தேதி வரை) அமலில் இருக்கும். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாற்றுப்  பாதையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள்  கொண்டு வரும் வாகனங்களுக்காக 4 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் வண்டிகளை நிறுத்த அனுமதியில்லை என அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு  அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் 2 நாட்கள் மதுக்கடைகளையும் மூட கலால்துறை  உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: