கோவில்பட்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் சாவு

கோவில்பட்டி, மே 23: கோவில்பட்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் பெண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. தமிழகத்தில் கோடை வெயில் தொடர்ந்து கொளுத்தி வருகிறது. இதே போல் நெல்லை மாவட்டம், தாழையூத்து வனப்பகுதியிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகரித்துகொண்டே வருகிறது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் இங்குள்ள பெண் புள்ளி மான் ஒன்று, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. பின்னர்  இந்த புள்ளிமான் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் நான்குவழிச்சாலை  சந்திப்பு ரோட்டில் சென்று கொண்டிருந்தது. புள்ளிமானை பார்த்த அங்கிருந்த  நாய்கள், அதனை விரட்டிச்சென்று கடித்துக் குதறின. இதில் படுகாயமடைந்த  புள்ளிமான் உயிருக்கு போராடிய நிலையில் நாலாட்டின்புதூர் உள்ள ஒரு  வீட்டிற்குள் புகுந்தது. வீட்டிற்குள் உடலில் காயங்களுடன் புகுந்த  புள்ளிமானை பொதுமக்கள் காப்பாற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்  அளித்தனர். இதையடுத்து அங்கு சென்ற கோவில்பட்டி வனக்காவலர் சிவராமனிடம் கிராம  மக்கள் புள்ளிமானை ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து கோவில்பட்டியில்  இருந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்த புள்ளிமானுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி புள்ளிமான் உயிரிழந்தது.  பின்னர் இறந்துபோன புள்ளிமானை வனப்பகுதியில் குழிதோண்டி வனத்துறையினர்  புதைத்தனர். தாழையூத்து  வனப்பகுதியில் ஏராளமான மான்கள், மயில்கள், முயல்கள், நரிகள் வாழ்ந்து  வருகின்றன. தற்போது கடும் கோடை வெயில் நிலவுவதால் இவைகள் வனப்பகுதியை விட்ட  வெளியேறி தண்ணீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றன. இவ்வாறு  செல்லும் இந்த வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில்  அடிபட்டு படுகாயமடைவதோடு, இறந்தும் விடுகின்றன.

எனவே குருமலை அடுத்துள்ள  தாழையூத்து வனப்பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் ஆங்காங்கே  தண்ணீர் தொட்டிகள் அமைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: