சாத்தான்குளம் அருகே செட்டிக்குளத்தில் கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் கிராம மக்கள் புகார்

சாத்தான்குளம், மே 23: செட்டிக்குளத்தில் கனரக வாகனத்தால் சாலை சேதமடைந்துள்ளதாலும், அதில் உருவான பள்ளத்தாலும் விபத்து அபாயம் நிலவுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் பகுதியில் இருந்து திருச்செந்தூர் கல்லாமொழிக்கு கனரக லாரிகள் மூலம் கற்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள் பேய்க்குளம் பகுதியில் தொடங்கி பனைக்குளம், கருங்கடல், இளமால்குளம்,  செட்டிக்குளம், பன்னம்பாறை விலக்கு, மெஞ்ஞானபுரம் வழியாக திருச்செந்தூர் செல்கின்றனர். இந்த வாகனங்கள் அதிவேகமாக சென்று திரும்புவதால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்வதால் இப்பகுதியில் உள்ள சாலைகளிலும் பாரம் தாங்காமல் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று செட்டிக்குளத்தில் இருந்து சாத்தான்குளம் வரும் சாலையின் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாலையில் உருவான பள்ளத்தால் விபத்து அபாயமும் நிலவுகிறது. குறிப்பாக வளைவில் உள்ள தரைநிலை பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உடைந்து பள்ளம் காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதையடுத்து கிராம மக்கள் அதில் தென்னை ஓலையை நட்டி எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த சாலை நெல்லை செல்லும் பிரதான சாலை என்பதால் அரசு பஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றனர். தற்போது செட்டிக்குளத்தில் தரைநிலை பாலம் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் எந்நேரமும் விபத்து அபாயம் உள்ளது. இந்த தரைநிலை பாலம் மேலும் உடைந்து பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி இதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பேய்க்குளம் பகுதியில் இருந்து பன்னம்பாறை விலக்கு வரை சிதைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: