×

கடையம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

கடையம், மே 23:  கடையம்  அருகே ரவணசமுத்திரத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி  விழுந்து காயமடைவதால் வேகத்தடை அமைக்க கோரிக்கை வலுத்து வருகிறது. கடையம்  அருகே ரவணசமுத்திரத்தில் நெல்லை - செங்கோட்டை  ஆளில்லா ரயில்வே கேட்டை  அகற்றிவிட்டு அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்தாண்டு  தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்து விட்டது. இந்த சுரங்கப்பாதை வழியை  ராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், ராஜாங்கபுரம், கோவிந்தபேரி, செட்டிகுளம்,  கல்யாணிபுரம், சம்பன்குளம், சிவசைலம், கருத்தப்பிள்ளையூர், மாலிக் நகர்,  ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கடையத்தில் இருக்கும் பள்ளி மற்றும்  டியூசன் சென்டர்களுக்கு குக்கிராமத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகளும் இந்த  பாதை வழியாக சென்று வருகின்றனர்.
 
இப்பாதையில் தரை தளம் அமைப்பதற்கு  முன்பு மழை தண்ணீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி வந்தது. இதனால் கிராம  மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இவ்வழியே தத்தளித்து சென்றனர்.  இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து சிமெண்ட் கான்கிரீட் தரை தளம்  அமைத்து மழை நீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது. தற்போது இந்த சுரங்கப்பாதை  அடியில் தரை தளத்தில்  மணல், கல், செங்கள் ஆகியன அப்புறப்படுத்தாமல்  ஆங்காங்கே   அப்படியே சிதறி கிடக்கின்றன. இதனால் வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்  மணலில் நிலை தடுமாறி சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.  ராமலிங்கபுரத்தில் இருந்து சுரங்கப்பாதைக்கு அருகில் வேகத்தடை அமைத்தால்  விபத்துகள் குறையும். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதில் வேகத்தடை அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags : railway tunnel ,
× RELATED கத்தி முனையில் மிரட்டி வடமாநில...