×

பராமரிப்பு பெயரில் மின்வெட்டை சமாளிக்கும் மின்வாரியம் காற்றாலை மூலம் 1000 மெகாவாட் உற்பத்தி

நெல்லை, மே 23: பராமரிப்பு என்ற பெயரில் மின்வெட்டை மின்துறையினர் சமாளித்து வருகின்றனர். ஜூன் 15ம் தேதிக்கு பிறகு காற்றாலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் அன்றாட மின்தேவை, 15 ஆயிரம்  மெகாவாட்டிற்கும் அதிகமாக உள்ளது. கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், மின்நுகர்வு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏசி, ஏர்கூலர்,  ஏர்பேன், குளிர்சாதன பெட்டி போன்றவைகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக  சில நேரங்களில் மின்நுகர்வு 16 ஆயிரம் மெகாவாட்டை எட்டியுள்ளது. இதனால் கடந்த வாரம் தமிழகத்தில் பல இடங்களில் திடீர் மின்வெட்டு அதிகரித்தது. அறிவிக்கப்படாமல் இரவிலும் மின்தடை செய்யப்பட்டது.
தற்போது நீர்நிலைகள் வறண்டு  விட்டதால், நீர் மின்சாரம் கிடைக்கவில்லை. வெயில் காரணமாக குறைந்திருந்த  காற்றாலை மின் உற்பத்தி தற்போது சற்று உயர்ந்துள்ளது. நேற்று முன்தின  நிலவரப்படி பகலில் 1848 மெகாவாட் முதல் 2075 மெகாவாட் வரை காற்றாலை மூலம்  மின்சாரம் உற்பத்தியானது. சராசரி காற்றாலை மின் உற்பத்தி 1005 மெகாவாட்  என்ற நிலையை எட்டியது.

மின்நுகர்வு அதிகரித்துள்ள நிலையில் தென்மேற்கு  பருவக்காற்று தொடங்குவதற்கு முன்னதாகவே அவ்வப்போது காற்று வீசுவதால்  காற்றாலை மின் உற்பத்தி ஓரளவு கை கொடுக்க துவங்கியுள்ளது. ஆனால் இது  நீடிக்குமா? என்பது கேள்விக்குறியே. அதே நேரத்தில் கிடைக்கும் காற்றாலை மின் உற்பத்தியில் மின் நுகர்வு அளவை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. இதன்  காரணமாக அனல் மின்சாரம் மற்றும் அணு மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம்  போன்றவை மூலம் கிடைக்கும் மின்சாரம் போக, மேலும் தேவைக்கு  தனியாரிடம்  மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மின்வெட்டை ஓரளவு சமாளிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர மின்வழிப்பாதை பராமரிப்பு என்ற  பெயரில் வெவ்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு  செய்வதும் நீடிக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவமழை  தொடங்கினால் 15ம் தேதிக்கு பின்னர் காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரம்  மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கோடை காலத்தில்  பயன்படுத்தப்படும் அளவிலான மின் நுகர்வும் குறையும் என்பதால் அதன்பிறகே அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு சீராகும் என தெரிகிறது.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி