×

பட்டா பாஸ் புத்தகம் வழங்க விவசாயியிடம் ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம வருவாய் அலுவலர் கைது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

திருமலை, மே 23: சித்தூர் அருகே பட்டா பாஸ் புத்தகம் வழங்க விவசாயியிடம் ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம வருவாய் அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கலிகிரி மண்டலம், மெடிகுருத்தி கிராமத்தை சேர்ந்தவர் ஹர்ஷத்வலி, விவசாயி. இவர் தனது ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்திற்கு பட்டா பாஸ் புத்தகம் கேட்டு இ-சேவை மூலமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக தொடர்ந்து கலிகிரி தாலுகா அலுவலகம் சென்று கிராம வருவாய் அலுவலர் சுதாகரிடம் கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், சுதாகர் ₹10 ஆயிரம் லஞ்ச பணம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் ஹர்ஷத்வலி தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தும் பணம் தந்தால் மட்டுமே பாஸ்புத்தகம் தர முடியும் என்று சுதாகர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் மனமுடைந்த ஹர்ஷத்வலி இதுகுறித்து திருப்பதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ₹10 ஆயிரத்தை ஹர்ஷத்வலியிடம் கொடுத்து சுதாகரிடம் வழங்குமாறு கூறினர். தொடர்ந்து, ஹர்ஷத்வலி பணத்தை சுதாகரிடம் வழங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி திருமலேஸ்வர்ரெட்டி, டிஎஸ்பி சுதாகர் ஆகியோர் கிராம வருவாய் அலுவலர் சுதாகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கிரிதர், பிரசாத்ரெட்டி, ரவிக்குமார், விஜய் சேகர் மற்றும் போலீசார் உடனிருந்தனர். பட்டா பாஸ் புத்தகம் வழங்க விவசாயியிடம் ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம வருவாய் அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் மற்ற அதிகாரிகளிடையே கலக்கத்தையும் பொதுமக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Village Revenue Officer ,
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...