×

அரக்கோணம் மக்களவை, 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் 11 மணியளவில் தெரிய வரும்

வேலூர், மே 23: வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மக்களவை தொகுதிக்கும், சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதன்படி, அரக்கோணம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும், சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் ராணிப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலும் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை, தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மத்திய தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கிறது. வாக்கு எண்ணும் பணியில் 700 பேர் ஈடுபடுகின்றனர். அதேபோல் குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 200 பேர் ஈடுபடுகின்றனர்.

இதையொட்டி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணும் அலுவலர்களும், காலை 7 மணி அளவில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மையத்துக்குள் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையங்கள் சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளன. இன்று காலை 8 மணியளவில் முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதே நேரத்தில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையும் தொடங்கும். சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு சுற்று முடிவும், தேர்தல் ஆணைய இணையதளம், செல்போன் செயலி மற்றும் தகவல் பலகையில் வெளியிடப்படும். காலை 11 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 84 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன்படி, அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு 24 சுற்றுகளும், இடைத்தேர்தல் நடந்த ேசாளிங்கர் சட்டப்பேரவை தொகுதிக்கு 22 சுற்றுகளும், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு 21 சுற்றுகளும், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு 18 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்படுகிறது.

தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும், ஒப்புகை ரசீது (விவிபேட்) இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும் தலா 5 ஒப்புகை ரசீது இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், ஒப்புகை ரசீது இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் ஒருவேளை வேறுபட்டால், ஒப்புகை ரசீது இயந்திரத்தில் பதிவான வாக்குகளே ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய போலீஸ் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நுழைவு வாயிலில் அதிநவீன சுழல் கண்காணிப்பு காமிரா மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இரண்டு வாக்கு எண்ணும் மையங்களில் ஐஜி நாகராஜன் மேற்பார்வையில் டிஐஜி வனிதா, எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Arakonam Lok Sabha ,Assembly constituencies ,
× RELATED ஒடிசாவில் அரச குடும்பத்தை சேர்ந்த 12 பேர் போட்டி