×

டிரைவர், நடத்துனர்களுக்கு வேலை பளு அதிகரிப்பு

திருப்பூர், மே 22: திருப்பூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ் டிரைவர், நடத்துனர்களுக்கு  தொடர் வேலை பளு காரணமாக மன அழுத்தம்அதிகரித்துள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் கோவை மண்டலத்திற்குட்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் திருப்பூர், காங்கேயம், பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் கிளை அலுவலகங்கள் செயல்படுகிறது. கிளைகளின் சார்பில் தொலை துார பஸ்கள், டவுன் பஸ்கள் என 900க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.

நடத்துனர்களின் பணிச்சுமைகளை குறைக்க அனைத்து நடத்துனர்களுக்கும் எலக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேவையான அளவு டிக்கெட் ரோல்கள் வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக டிக்கெட் ரோல்கள் தேவையான அளவு வழங்கப்படுவதில்லை. மேலும் டிக்கெட் இயந்திரங்கள் பழுதடைந்தால் மாற்று இயந்திரங்கள் வழங்கப்படுவதில்லை.

இதனால், மீண்டும் டிக்கெட் முறைக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. புதிதாக பணிக்கு சேர்ந்துள்ள நடத்துனர்களுக்கு கட்டணம் வாரியாக உள்ள பேப்பர் டிக்கெட் பண்டல்களை கையில் பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். ஸ்டேஜ் வாரியாக டிக்கெட் விற்பனை குறித்த குறிப்புகளை பட்டியலில் எழுத தெரிவதில்லை.  இதனால் நடத்துனர்கள் சொந்த செலவில் டிக்கெட் இயந்திரங்களையும், பேப்பர் ரோல்களை வாங்கி இருப்பு வைத்து பயன்படுத்தி வருகின்றனர். 100 டிக்கெட்டுக்கு ஒரு ரோல் மாற்ற வேண்டியுள்ளது.

இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் உடனடியாக பழுதுநீக்கி தருவதில்லை. மாதக்கணக்கில் கிடப்பில் போடுவதால் நடத்துனர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்துகழக கிளை மேனேஜர்கள் நடத்துனர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு டிக்கெட் இயந்திரங்களை இருப்பு வைத்து வழங்க வேண்டும். ஏற்கனவே பயணிகளுக்கு சில்லரை வழங்குவதில் பிரச்னை, மதுபோதையில் உள்ள பயணிகளுடன் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், தொடர் வேலை பளு ஆகிய காரணங்களால் மன உளைச்சலுடன் வேலை பார்த்து வரும் நிலையில், டிக்கெட் இயந்திர கோளாறுகளால் மன உளைச்சல் அடைந்து வருகின்றனர்.

இதே போல் டிரைவர்களுக்கும் தொடர் வேலை பளு அளித்து வருவதால், தூக்கம் இல்லாமல் பஸ்சை இயக்குகின்றனர்.இதனால் விபத்து ஏற்படுகிறது. ஒரு சில டிரைவர், நடத்துனர்கள் மதுபோதைக்கு அடிமையாவதோடு, மாரடைப்பு, பைல்ஸ், சுகர், பிரஷர் உட்பட பல்வேறு வியாதிகளோடு வேலை பார்க்கின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்க்கும் டிரைவர்கள், நடத்துனர்களுக்கு தொடர் பணிகளை வழங்குவதை தவிர்த்து, ஓய்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 3 மாதங்களில் 10க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளனர். 5 பேருக்கு கை, கால்கள் செயல் இழப்பு ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூடுதல் பணியாளர்களை நியமித்து டிரைவர், நடத்துனர்களின் பணிச்சுமையை குறைக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு