விதிமீறி வைக்கப்படும் டிவைடர்களால் விபத்து அபாயம்

திருப்பூர், மே 22: திருப்பூரில் விதிமீறி, ரோடுகளில் டிவைடர் வைக்கப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.  மாநில மற்றும் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடை மற்றும் டிவைடர்கள் வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள ரோடுகளில், இதுபோன்ற தடை ஏற்படுத்தும் போது, போக்குவரத்து சீராய்வு கமிட்டி மூலம் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கொண்ட குழு ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இந் நிலையில், திருப்பூரில் விதிமீறி ஏராளமான ‘டிவைடர்’ வைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றப்படுகிறது. மேலும், போக்குவரத்து அதிகமான முக்கிய ரோடுகளில், பல இடங்களில் வைக்கப்படும் டிவைடர்களால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் முன்பு குறிப்பிட்ட நேரம் மட்டும் வைப்பதற்கு பதிலாக, டிவைடர்கள் சாலைகளில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

குறிப்பாக, புறநகர் பகுதிகளில் வைக்கப்படும் டிவைடர்கள் இருப்பது தெரியாமல், இரவு நேரங்களில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. அவினாசி ரோடு, பி.என்.ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு என பல இடங்களில் அதிகாரிகளுக்கே தெரியாமல் டிவைடர் வைக்கப்படுகின்றன.

எனவே, விதிமுறைப்படி ரோடுகளில் தேவையான இடங்களில் மட்டும் டிவைடர் வைக்கவும், விதிமீறி தனியார் நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பர டிவைடர்களை அகற்றவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: