மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு 12 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

திருப்பூர், மே 22:  திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 31 தேர்வு மையங்களில் 12 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.  கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

இந்த தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும், 2ம் தாளில் வெற்றி பெற்றவர்கள் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதி உடையவர்கள் ஆவர். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 8 மற்றும் 9ம் ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்.12ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவு நடந்தது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் முதல் தாள் தேர்வுக்கு 4 ஆயிரத்து 500 பேரும், 2ம் தாள் தேர்வுக்கு 7 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் முதல் தாள் தேர்வு எழுத திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 7 மையங்களும், பல்லடம் கல்வி மாவட்டத்தில் 1 மையமும், தாராபுரம் கல்வி மாவட்டத்தில் 2 மையங்களும், உடுமலை கல்வி மாவட்டத்தில் 2 மையங்கள் என மொத்தம் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், 2ம் தாள் தேர்வை எழுத திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 11 மையங்களும், பல்லடம் கல்வி மாவட்டத்தில் 2 மையமும், தாராபுரம் கல்வி மாவட்டத்தில் 3 மையங்களும், உடுமலை கல்வி மாவட்டத்தில் 3 மையங்கள் என மொத்தம் 19 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 31 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: