நாளை வாக்கு எண்ணிக்கை அனைத்து ஏற்பாடுகளும் தயார்

பொள்ளாச்சி, மே 22:  பொள்ளாச்சியில், மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் அனைத்தும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் பொள்ளாச்சி, வால்பாறை(தனி), மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தமுள்ள 1691 வாக்குச்சாவடிகளில், கடந்த மாதம் 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அந்தத்த பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்த அறைகளுக்கு  துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வாரு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் தலா 15 கேமராக்களும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை சுற்றி 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனி கட்டுப்பாட்டு அறையில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு வசதியாக பெரிய அளவிலான அறை தேர்வு செய்யப்பட்டு அங்கு, மூங்கில் தடுப்புகள் கட்டப்பட்டு அதன்மேல், இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்தை அவ்வப்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர். வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உரிய  அட்டையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் அனைவரும் நாளை காலை 7மணிக்கு முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நேற்று, பொள்ளாச்சி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதுரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிஎஸ்பி.,சிவக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளான நாளை, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே, வேட்பாளர்களின் முகவர்கள் ஓட்டு எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஒலிபெருக்கி  அமைக்கப்பட்டுள்ளது.

தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதிகளுக்கு தலா 22 சுற்றுகளும், மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு தலா 21 சுற்றுகளும், பொள்ளாச்சி 20 சுற்றுகளும், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு 17 சுற்றுகளுமாக எண்ணப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: