×

கல்வி மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பொள்ளாச்சி, மே 22:     பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தாலுகா பகுதிகளில் சுமார் 69 தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று, ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது.   அதன்படி இந்த ஆண்டில், வரும் ஜூன் மாதம் 3ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், நேற்று உடுமலைரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.  இதில், பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரவழைக்கப்பட்டு வரிசையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.   வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். பள்ளி வாகனங்களில் உள்ள குறைபாடு குறித்து வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார்,  டிஎஸ்பி., சிவக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முனுசாமி, செல்வதீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.   தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு, மாணவர்களை ஏற்றிசெல்லும் வாகனத்தை கவனத்துடன் எவ்வாறு இயக்குவது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனங்களையும், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.   டிரைவர் உரிமத்தை புதுப்பித்துள்ளாரா குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா என்பதை குறித்து கேட்டறிந்தனர். பஸ்சில் இருக்கை, மேல்பலகை உள்ளிட்டவை உறுதியாக உள்ளதா, முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதற்கான அத்தாட்சி சான்றுபெற்ற பிறகே, ஜூன் மாதம் பள்ளி திறப்பின்போது, மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.   மாலை வரை நடைபெற்ற ஆய்வின்போது மொத்தமுள்ள 300 வாகனங்களில் 18 வாகனங்களுக்கு குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களின் தகுதிசான்றை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர். இன்னும் ஒரு வாரத்திற்குள், பள்ளி வாகனத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும், அதன்பிறகே அந்த வாகனங்களுக்கு தகுதி சான்று அளிக்கப்படும் என,  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : education district ,
× RELATED அரியலூர் அண்ணா சிலை பகுதியில்...