கைப்பந்து போட்டி இந்தியன் வங்கிக்கு டெக்ஸ்மோ கோப்பை

பெ.நா.பாளையம், மே 22: பெரியநாயக்கன்பாளையத்தில் அக்வாபம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ராமசாமி நினைவு 51வது  மாநில அளவிலான கைப்பந்து போட்டியின்  இறுதி ஆட்டத்தில்  இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று டெக்ஸ்மோ கோப்பையை கைப்பற்றியது.

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் வெங்கடகிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் இப் போட்டி நடந்தது. போட்டியில் இந்தியன் வங்கி, சுங்கவரித்துறை, தமிழக காவல்துறை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், வருமான வரித்துறை, அக்வாபம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் பங்கேற்றன.

நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் தமிழக காவல்துறை அணியும், அக்வாபம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில், 3:1 என்ற புள்ளிக்கணக்கில் தமிழக காவல்துறை அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணியும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணியும் மோதின. இதில், 3:2 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது. இதுவரை நடந்த ஆட்டங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலிடம் பிடித்த சென்னை இந்தியன் வங்கி அணிக்கு டெக்ஸ்மோ கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.

2ம் இடம் பெற்ற எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழத்திற்கு ரூ.40 ஆயிரமும், 3ம் இடம் பெற்ற சுங்கவரித்துறை அணிக்கு ரூ.35 ஆயிரமும், 4ம் இடம் பிடித்த தமிழக காவல்துறை அணிக்கு ரூ.30 ஆயிரமும், 5ம் இடம் பெற்ற அக்வாபம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு அக்வா குழுமத்தின் துணைத் தலைவர் வேலுசாமி, அக்வாபம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்வா குழுமத்தின் நிர்வாக இயக்குநர்கள் குமாரவேலு, ஹோமய் குமாரவேலு ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினர். விழாவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கைப்பந்து கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: