×

பூலாம்பட்டி- நெரிஞ்சிப்பேட்டை கதவணை பராமரிப்பு பணி

இடைப்பாடி, மே 22:  இடைப்பாடி அருகே பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை கதவணை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரை ஆதாரமாக கொண்டு கரையோரத்தில் உள்ள செக்கானூர், ஊராட்சிக்கோட்டை, பூலாம்பட்டி- நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி ஆகிய கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக ஆண்டு முழுவதும் அப்பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், காவிரி ஆற்றில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாலும், பூலாம்பட்டி-நெறிஞ்சிப்பேட்டை கதவணை மின்நிலையத்தில் பராமரப்பு பணிக்காகவும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி தொடங்கிய பராமரிப்பு பணியானது, வரும் 7ம் தேதி வரையிலும் 19 நாட்கள் நடக்கிறது. இதற்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், கடல்போல் காணப்படும் பூலாம்பட்டி காவிரி ஆறு, தற்போது குட்டைபோல் மாறியுள்ளது.

 நீர்மட்டம் குறைந்துள்ளதால் பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இருப்பாளி கூட்டுகுடிநீர் திட்டம், பூலாம்பட்டி குடிநீர் திட்டம், இடைப்பாடி நகராட்சி குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் மோட்டார் இறக்கி தண்ணீர் எடுக்கும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர்.  
இதுகுறித்து இடைப்பாடி நகராட்சி ஆணையாளர் செந்தில்குமார்(பொறுப்பு) கூறுகையில், இடைப்பாடி நகராட்சியில் முக்கிய குடிநீர் ஆதாரமான பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றில் தடுப்பணையில் வரும் 7ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அப்பகுதியில் காவிரி ஆற்றில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, மோட்டார் வைத்து தண்ணீர் ஏற்றி தருகிறோம். எனவே, பொதுமக்கள் அனைவரும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், குடிநீரை காய்ச்சி குடித்து, நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்